என் மலர்
உள்ளூர் செய்திகள்

மதுரையில் ஊராட்சி செயலர் சரமாரி வெட்டிக்கொலை

மதுரை:
மதுரை வரிச்சியூரை அடுத்த தட்சனேந்தல் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 52). இடையபட்டி ஊராட்சி செயலாளரான இவர் கருப்புக்கால் காளி அம்மன் கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வந்தார்.
லட்சுமணன் இன்று அதிகாலை கோவிலுக்கு பூஜை செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். அப்போது வரிச்சியூர்-தச்சனேந்தல் மெயின்ரோட்டில் மர்ம கும்பல் அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டது. இதையடுத்து லட்சுமணனுக்கும், அந்த கும்பலுக்கும் வாக்குவாதம் வலுத்தது.
இதில் ஆத்திரம் அடைந்த மர்ம கும்பல், லட்சுமணனை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் அவருக்கு தலை மற்றும் மார்பு ஆகிய பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.
அரிவாள் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிய லட்சுமணனை அந்த பகுதியை சேர்ந்த சிலர் மீட்டு, ஆம்புலன்சில் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே லட்சுமணன் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக கருப்பாயூரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில்சில தகவல்கள் கிடைத்தன. லட்சுமணனின் தந்தை சன்னாசிக்கு 2 மனைவிகள் உள்ளனர். இதில் 2-வது மனைவியின் மகன் லட்சுமணன், கருப்புக்கால் காளியம்மன் கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார்.
இது சன்னாசியின் முதல் மனைவியின் மகன்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இரு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்திருக்கிறது. இதன் காரணமாக அவர்கள் லட்சுமணனை வெட்டி கொன்றனரா?
அல்லது வேறு பிரச்சினை காரணமாக யாரேனும் அவரை கொலை செய்தார்களா? என்பது தெரியவில்லை இதுதொடர்பாக கருப்பாயூரணி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையான லட்சுமணனுக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.