search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாரதி செல்லம்மாள் சிலை
    X
    பாரதி செல்லம்மாள் சிலை

    பாரதி-செல்லம்மாள் சிலையை பார்வையிட்ட பொதுமக்கள்

    பாரதி-செல்லம்மாள் சிலையை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
    மதுரை

    மகாகவி பாரதியாரின் மனைவி செல்லம்மாள். இவர் தென்காசி மாவட்டம், கடையத்தை சேர்ந்தவர். இங்கு பாரதியார் பல வருடங்களாக வசித்து வந்தார். 

    அப்போது அவரது கவி பாடும் திறமையை வெளி உலகத்துக்கு எடுத்துச் செல்ல மனைவி செல்லம்மாள் உந்து சக்தியாக இருந்தார்.      செல்லம்மாளுக்கு கடையத்தில் சிலை வைக்க வேண்டும் என்று சென்னை திருநின்றவூர் சேவாலயா டிரஸ்ட் முயற்சி  மேற்கொண்டு வருகிறது.

    இதற்காக  திருநின்றவூரில் இருந்து ‘செல்லம்மா பாரதி ரதயாத்திரை’ கடந்த ஏப்ரல் மாதம் 17-ந் தேதி புறப்பட்டது.

    ஒருங்கிணைப்பாளர் காஞ்சனா தலைமையில் ரதயாத்திரை, நேற்று இரவு மதுரைக்கு வந்தது. செல்லம்மா பாரதி ரதம் இன்று காலை மதுரை கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.  

    மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் இன்று மாலை பாராட்டு விழா நடக்கிறது.

    இது குறித்து சேவாலயா ஒருங்கிணைப்பாளர் காஞ்சனா கூறுகையில்,   “பாரதியாரின் சிலை, அவரோடு தொடர்பு உடைய எட்டையபுரம், புதுச்சேரி, சென்னை மற்றும் பல இடங்களில் உள்ளன. 

    ஆனால் பாரதியின் மனைவி செல்லம்மாளின் பிறந்த ஊரான கடையத்தில் நினைவு சின்னம் எதுவும் இல்லை என்பது வருத்தத்துக்கு உரியது. கடையத்தில் பாரதி 2 ஆண்டுகளுக்கும் மேல் தங்கி உள்ளார். பாரதியாரின் அமரத்தன்மை வாய்ந்த பல கவிதைகள், அரங்கேறியது கடையத்தில் தான்.  

    அங்கு ரூ.3 கோடி மதிப்பில் செல்லம்மா பாரதி கற்றல் மையம் அமைப்பது என்று சேவாலயா அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. அங்கு பாரதி நூலகம், அருங்காட்சியகம், ஆய்வு மையம் மற்றும் பாரதி தொடர்பான கருத்தரங்கு, கவியரங்கு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான மையம் ஏற்படுத்தப்படும். அந்த கட்டிடத்தின் நடுவில் செல்லம்மா பாரதி சிலையை நிறுவ திட்டமிட்டு உள்ளோம்.

    இந்த ரதயாத்திரை வருகிற 31-ந் தேதி கடையத்துக்கு செல்கிறது. அங்கு வருகிற ஜூன் மாதம் 27-ந் தேதி பாரதி செல்லம்மா சிலையை திறந்து வைக்க  முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அனுமதி கேட்டுள்ளோம்” என்றார். 
    Next Story
    ×