search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை
    X
    கொலை

    ஊராட்சி தலைவர் படுகொலை- கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு

    தொழில் போட்டியில் மனோகரனுக்கும் சிலருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. எனவே இந்த மோதலில் கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த கொண்டகரையை சேர்ந்தவர் மனோகரன் (வயது38). அ.தி.மு.க. பிரமுகரான இவர் கொண்டகரை ஊராட்சியில் 2வது முறையாக தலைவராக பதவி வகித்து வந்தார்.

    நேற்று இரவு அவர் மனைவி சர்மிளா, மகன் ரக்சன், மகள் ரக்சிதா என குடும்பத்துடன் குருவி மேடு கிராமத்தில் நடந்த ஒரு மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து விட்டு காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார்.

    குருவி மேடு அசோக் லைலாண்ட் கம்பெனி அருகே வந்தபோது எதிரே வந்த டிப்பர் லாரி திடீரென கார் மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் சரிந்து சிக்கியது.

    அப்போது லாரியில் இருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இறங்கிய 10 பேர் கும்பல் கார் கண்ணாடியை உடைத்து மனோகரனை சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த மனோகரன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனை கண்ட காரில் இருந்த அவரது மனைவி சர்மிளா மற்றும் மகன், மகள் அலறி துடித்தனர்.

    உடனே கொலை வெறி கும்பல் தாங்கள் வந்த அதே லாரியில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் உயிருக்கு போராடிய மனோகரனை மீட்டு திருவெற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மனோகரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மனோகரன் கொலை செய்யப்பட்டது பற்றி அறிந்ததும் அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி மீஞ்சூர் மணலி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் மீஞ்சூர் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த மறியலால் மீஞ்சூர் மணலி நெடுஞ்சாலையில் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் பதட்டமான நிலை நீடித்து வருகிறது. அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருக்க 100க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

    கொலையாளிகளை பிடிக்க செங்குன்றம் உதவி கமிஷனர் முருகேசன் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    ஊராட்சி தலைவர் மனோகரனை மர்ம கும்பல் திட்டமிட்டு தீர்த்து கட்டி உள்ளனர். அவர் காரில் வருவதை அறிந்து லாரியால் மோதவிட்டு கொடூரமாக மனைவி, குழந்தைகள் கண்முன்னேயே தீர்த்து கட்டி இருக்கிறார்கள்.

    கொலையாளிகள் தப்பி சென்ற லாரி எந்த வழியாக சென்றது என்பது குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர். கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    கொலையுண்ட ஊராட்சி தலைவர் மனோகரன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இதேபோல் வல்லூர் அனல் மின் நிலையத்தில் சாம்பல் கழிவுகளை எடுக்கும் ஒப்பந்தம், மற்றும் தனியார் கம்பெனிகளில் காண்டிராக்ட் எடுத்து தொழில் செய்து வந்துள்ளார்.

    தொழில் போட்டியில் மனோகரனுக்கும் சிலருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. எனவே இந்த மோதலில் கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    மனோகரனுடன் தொழில் ரீதியாக மோதலில் ஈடுபட்டவர்கள் விபரத்தை சேகரித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    இதற்கிடையே கொலையாளிகள் தப்பி சென்ற லாரி அத்திப்பட்டு புதுநகர் அருகே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. லாரியை அங்கு நிறுத்தி விட்டு கொலையாளிகள் தப்பி சென்று உள்ளனர். அந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனை வைத்து லாரி உரிமையாளர், அதனை ஓட்டிச்சென்ற டிரைவர் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×