search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சாரம் தாக்கி பலியான ரவியின் குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
    X
    மின்சாரம் தாக்கி பலியான ரவியின் குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    சீர்காழி அருகே சாலை விரிவாக்க பணி நிறுவன வளாகத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சாலை விரிவாக்க பணி நிறுவன வளாகத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த அல்லிவிளாகம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 52) கூலித்தொழிலாளி.

    இவர் அருகில் காத்திருப்பு கிராமத்தில் விழுப்புரம்- நாகப்பட்டினம் சாலை விரிவாக்கப் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் ஒப்பந்த நிறுவனம் அமைத்துள்ள பிளான்ட் வளாகத்தில் இன்று காலை அங்கு கிடக்கும் பழைய பாட்டில்களை சேகரித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த நிறுவன வளாகத்தில் சுமார் 100 பேர் தங்கியுள்ள இரும்பு கொட்டகைக்கு மின் இணைப்பு வயர் ஜாயின்ட் முறையாக கொடுக்கப்படாததால் அதன்மூலம் அங்கு அருகில் இருந்த எர்த் கம்பியில் மின்சாரம் பாய்ந்து உள்ளது. இதனை அறியாத ரவி கம்பி அருகே பாட்டில்களை சேகரித்த போது மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து ரவி பலியானார்.

    இது குறித்து அறிந்த ரவியின்குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் அப்பகுதியில் திரண்டனர். சாலை விரிவாக்கப் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனம் பாதுகாப்பற்ற முறையில் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், பலியான ரவியின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சீர்காழி நாகை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை மூடும் வரை தொடர் போராட்டம் நடத்துவோம் என கோஷங்கள் எழுப்பினர். இது பற்றிய தகவல் அறிந்த சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமெக் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பாதுகாப்புக்காக 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×