search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுற்றுலாபயணிகளை வரவேற்க தயாராக உள்ள ரோஜாக்கள்
    X
    சுற்றுலாபயணிகளை வரவேற்க தயாராக உள்ள ரோஜாக்கள்

    கூடலூரில் இன்று வாசனை திரவிய கண்காட்சி தொடங்கியது- நாளை ரோஜா கண்காட்சி

    காலை முதலே வாசனை திரவிய கண்காட்சி நடைபெறும் இடத்தில் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வந்திருந்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு கோடை விழா கடந்த வாரம் கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. 2 நாள் நடந்த கண்காட்சியை 15 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர்.

    அதனை தொடர்ந்து இன்று கூடலூரில் கோடை விழாவையொட்டி 9வது வாசனை திரவிய கண்காட்சி இன்று மார்னிங் ஸ்டார் பள்ளி வளாகத்தில் தொடங்கியது. கண்காட்சியில் அமைச்சர் ராமச்சந்திரன், கலெக்டர் அம்ரித் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, தொடங்கி வைத்தனர்.

    கண்காட்சிக்காக பள்ளி மைதானத்தில் 37 அரங்குகள் வருவாய்த்துறை சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் தோட்டக்கலை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மற்றும் தனியார் தொண்டு அமைப்புகள் சார்பிலும் காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    வாசனை திரவிய கண்காட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில் வாசனை திரவியங்களான ஏலக்காய், குறு மிளகு, ஓமம், உள்பட பல்வேறு வகையான வாசனை திரவிய பொருட்கள் கண்காட்சிக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் வாசனை திரவியங்களை கொண்டு ஏர் உழவர் மற்றும் பசுந்தேயிலை பறிக்கும் பழங்குடியினப் பெண் போன்ற சிற்பங்களும் வடிவமைக்கப்பட்டு காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

    கூடலூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் சிறு, சிறு வனவிலங்குகளும் செய்யப்பட்டு கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.

    காலை முதலே வாசனை திரவிய கண்காட்சி நடைபெறும் இடத்தில் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வந்திருந்தனர். அவர்கள் அங்கு காட்சிபடுத்தப்பட்டிருந்த வாசனை திரவிய பொருட்களையும், சிற்பங்களையும் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    இன்று முதல் 3 நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சியில் கூடலூர் நகராட்சி நிர்வாகம் மற்றும் நகராட்சி ஒப்பந்ததாரர்கள் சார்பில் கோடை விழா விளையாட்டு போட்டிகளும், பல்வேறு அமைப்புகள் சார்பில் கலை கலாசார நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களும் இந்த வாசனை திரவிய கண்காட்சியில் பெற்றது.

    கோடை விழாவிற்கான ஏற்பாடுகளை கூடலூர் கோட்டாட்சியர் சரவணன் தலைமையில் வருவாய்த் துறையினர் செய்திருந்தனர்.

    ஊட்டி ரோஜா பூங்காவில் 17வது ரோஜா கண்காட்சி நாளை தொடங்குகிறது. 2 நாட்கள் நடக்கும் கண்காட்சியையொட்டி நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர கடந்த சில மாதங்களாகவே பணியாளர்கள் மலர் நாற்றுகள் நடவு செய்து பராமரித்து வந்தனர்.

    தற்போது பூங்காவில் உள்ள ரோஜா செடிகளில் பல்வேறு வண்ணங்களில் கண்ணை கவரும் வகையில் ரோஜா பூக்கள் பூத்து குலுங்குகின்றன. கண்காட்சியை முன்னிட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக அடுக்கு ரோஜா தோட்டம் அமைக்கப்பட்டு, அங்கு 31, 500 ரோஜாமலர்கள் தயார் நிலையில் உள்ளன. ரோஜா பூங்காவின் நுழைவு வாயிலில் தோரணம் கட்டப்பட்டு அலங்காரமும் செய்யப்பட்டுள்ளது. நாளை கண்காட்சி நடக்க உள்ளதால் ஊழியர்கள் ரோஜா பூங்காவில் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    தற்போது ஊட்டிக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் ரோஜா பூங்காவில் பூத்து குலுங்கும் ரோஜா பூக்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.

    * * * ஊட்டியில் நாளை தொடங்க உள்ள கண்காட்சியில் சுற்றுலாபயணிகளை வரவேற்க தயாராக உள்ள ரோஜாக்கள்.

    Next Story
    ×