search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் உடல் ஆரோக்கியத்திற்கு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் டாக்டர்கள் விளக்கம்

    தேர்வு நேரத்தில் எளிதில் செரிக்கக்கூடிய இட்லி, இடியாப்பம், புட்டு ஆகியவற்றை காலை, இரவு நேரங்களில் உண்ணலாம்.
    திருப்பூர்:

    வருகிற 5-ந்தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்குகிறது. தேர்வு நெருங்கும்போது ஒருவித பதட்டம், படபடப்பு, மன அழுத்தம் வரத்தான் செய்கிறது. அதிலும் 2  ஆண்டுகளாக எழுதாத பொதுத்தேர்வினை மாணவர்கள் எதிர்கொள்ள உள்ளனர்.

    குழந்தைகளின் கவனம் முழுவதும் புத்தகத்திலே மூழ்கி கிடக்கும் இந்த சமயத்தில் பெற்றோர் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டியது அவசியம். 

    எனவே குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டுமென பெற்றோர்களை டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    இதுகுறித்து திருப்பூர் டாக்டர்கள் சிலர் கூறுகையில், 

    மாணவர்கள் காலை உணவை மட்டும் தவிர்க்கக்கூடாது. குறிப்பாக தேர்வு நேரத்தில் எளிதில் செரிக்கக்கூடிய இட்லி, இடியாப்பம், புட்டு ஆகியவற்றை காலை, இரவு நேரங்களில் உண்ணலாம். சப்பாத்தி, ரொட்டி, தோசையை இரண்டாம் பட்சமாக வைத்துக்கொள்ளலாம். 

    இரவு பூரி, புரோட்டா, நூடுல்ஸ் ஆகிவற்றை முற்றிலும் தவிர்த்தாலே சீரான ரத்த ஓட்டத்தால் மூளை சுறுசுறுப்பாக இயங்கும். 

    தினம் ஒரு பருப்பு, கீரை, காய், தினமும் ஒரு பருப்பு, ஒரு கீரை, ஒரு காய் அவசியம். கேரட், பீட்ரூட், அவரை, முட்டைக்கோஸ் போன்ற அடர் நிறமுள்ள காய்கறிகள் மிக நல்லது. 'வைட்டமின் ஏ' நிறைந்த முருங்கை கீரை கண்களுக்கு ஏற்றது. 

    அதிக நேரம் படிக்கும் போது கண்ணில் எரிச்சல் ஏற்படாமல் தவிர்க்கும். தேர்வு நேர மன அழுத்தத்தால் மாணவர்களுக்கு வயிற்றில் அதிக அமிலம் சுரந்து, அஜீரணம், அல்சர் போன்றவை தலைக்காட்டும். இதற்கு தயிர் சேர்க்கலாம். ஜீரண சக்தி ஒழுங்காகும்.

    அரிசி சாதம், தக்காளி சாதம், பருப்பு, ரசம், கீரை சாதங்களை மதியம் உண்ணலாம். இரவில் வயிறு முட்ட சாப்பிடாமல், இட்லி போன்ற ஆவியில் வேகவைத்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. 

    புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்ற புளிப்புள்ள சாதவகைகளை தவிர்க்க வேண்டும்.முளைகட்டிய பயிர்கள், தேனில் ஊறவைத்த பேரீச்சை, அத்திப்பழம், வேகவைத்த வேர்க்கடலை, பாதாம் பருப்பு, காய்கறி, புரூட் சாலட் சாப்பிடுங்கள். பாதாம் பருப்பு நினைவாற்றலுக்கு நல்லது.

    பல மாணவர்கள் செய்யும் தவறு, தூக்கம் வராமல் இருக்க இரவு நேரங்களில் டீ, காபி குடிப்பது. இதற்கு பதில் சூடான பால், லெமன் டீ பருகுங்கள், காலையில், எலுமிச்சை பழச்சாறு, காய்கறி சூப், கீரை சூப் சாப்பிடலாம்.


    முடிந்தவரை தண்ணீர் நிறைய குடியுங்கள். படிக்கும் போது உண்டாகும் தலைவலியை குறைக்கும்.

    திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை, மாவட்ட மனநல மருத்துவர் அலுவலர் சுகன்யாதேவி கூறுைகயில்,

    மாணவர்களுக்கு அழுத்தத்தை உண்டாக்குவதில் ஆசிரியர்களுக்கும் பங்குண்டு. நன்றாக படிக்கும் மாணவர்கள் மீதே கவனம் செலுத்துகின்றனர். 

    சுமாராக படிக்கின்றவர்களை அதிகம் கவனிப்பதில்லை. இதனால் பதற்றம் கொள்கிறார்கள். ஆசிரியர்- மாணவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு கால அட்டவணையை திட்டமிட உதவலாம். செயல்திறன்களை கவனித்து அதற்கேற்ப உதவலாம். 

    உடல், மனநலம் இரண்டுமே முக்கியம். தேர்வு அறையில் பிறர் மீது கவனம் செலுத்தாமல் தேர்வின் மீது முழு கவனம் செலுத்துங்கள். தொடர்ந்து ஒரே பாடத்தை படிக்காமல் மாற்றி மாற்றி படியுங்கள்.

    திருப்பூரில் மாவட்ட மனநலத்திட்டம் சார்பில் பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. 

    உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் வாழ்க்கைத்திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கியுள்ளோம். 

    தூக்கமின்மை, எரிச்சல், முன்கோபம், தலைவலி, உடல்வலி,அதிகம் பசியெடுத்தல், பசியின்மை இதுபோன்ற  பிரச்சினைகள்,அறிகுறிகள் இருப்பின் மாவட்ட மனநல ஆலோசனை மையத்தை அணுகலாம், அல்லது 104 இலவச ஆலோசனை எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். 

    இவ்வாறு அவர் கூறினார்.  
    Next Story
    ×