search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    அண்ணா சாலை பெட்ரோல் பங்கில் வேலைக்கு சேர்ந்த முதல் நாளே பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடிய வாலிபர் கைது

    அண்ணா சாலை பெட்ரோல் பங்கில் வேலைக்கு சேர்ந்த முதல் நாளே பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை அண்ணா சாலை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் வேலை கேட்டு வந்தார்.

    வேலை இல்லாமல் கஷ்டப்படுவதாக பாவம் போல் அவர் பேசி உள்ளார். இதை தொடர்ந்து பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர் ஏதாவது ஒரு அடையாள அட்டையை கொடுத்து விட்டு வேலைக்கு சேருங்கள் என்று கூறி உள்ளனர். இதற்கு பதில் அளித்த அவர் அடையாள அட்டை வீட்டில் உள்ளது. அதனை நாளை எடுத்து வருகிறேன் என கூறி உள்ளார்.

    தனது பெயர் மாரி என்றும் செங்கல்பட்டில் வசித்து வருவதாகவும் தெரிவித்து உள்ளார். இதனை நம்பி பெட்ரோல் பங்க் மேலாளர் மாரிக்கு வேலை போட்டு கொடுத்து உள்ளார். மாரியும் பெட்ரோல் போடும் பணியை மேற் கொண்டார். காலையில் இருந்து மாலை வரை பெட்ரோல் பங்கில் வேலை செய்த மாரி திடீரென மாயமானார். இதையடுத்து பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர் மாரி பெட்ரோல் போட்டு வசூல் செய்த பணம் எவ்வளவு என்று பார்த்தனர். அவர் ரூ.14 ஆயிரத்து 700க்கு பெட்ரோல் போட்டு பண வசூலில் ஈடுபட்டது தெரியவந்தது.

    அந்த பணத்துடன் மாரி ஓட்டம் பிடித்திருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர் இது பற்றி அண்ணாசாலை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.

    உதவி கமிஷனர் பாஸ்கர், இன்ஸ்பெக்டர் சிவகாமி ஆகியோர் விசாரணை நடத்தினர். பெட்ரோல் பங்கில் மாரி வேலை செய்த போது பதிவாகி இருந்த கேமரா காட்சிகளை வைத்து மாரியை போலீசார் அடையாளம் கண்டனர்.

    செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் என்று மாரி கூறி இருந்ததால் அங்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். மாரியின் போட்டோவை காட்டி விசாரித்ததில் முழு பெயர் மாரியப்பன் என்பதும் செங்கல்பட்டு அருகே உள்ள ஆரப்பாக்கத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

    இதை தொடர்ந்து மாரி என்ற மாரியப்பனை போலீசார் கைது செய்தனர். திருமணமாகி மனைவி 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்த மாரியப்பன் போலீஸ் பிடியில் சிக்கியதும் இதெல்லாம் பெரிய விஷயமா? இதுக்கு போயி என்னை பிடிக்க வந்திருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். பின்னர் மாரியப்பனை சென்னைக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கொள்ளையடித்த பணத்தின் பெரும் பகுதியை மாரியப்பன் வீட்டில் கொடுக்காமல் ஊதாரித்தனமாக செலவு செய்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    அவரிடம் இருந்து ரூ.1100 பணம் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×