என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
உடுமலை பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளால் விவசாயம் பாதிக்கும் அபாயம்
பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் டம்ளர், தட்டு, தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் ஸ்ட்ரா, கைப்பை ஆகியவை வழக்கத்தை விட கூடுதலாக மக்களால் பயன்படுத்தப்படுகிறது.
உடுமலை:
தமிழகம் முழுவதும் கடந்த 2019-ல் தடிமன் வேறுபாடு இல்லாமல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள், டம்ளர், தட்டு ஆகியவற்றுக்கு தமிழக அரசு தடை விதித்தது. உடுமலை நகரில் அரசால் தடை செய்யப்பட்ட அனைத்து வித பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையும், பயன்பாடும் அபரிமிதமாக அதிகரித்துள்ளது.
பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் டம்ளர், தட்டு, தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் ஸ்ட்ரா, கைப்பை ஆகியவை வழக்கத்தை விட கூடுதலாக மக்களால் பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு பயன்படுத்தப்பட்டு வீசி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், சாக்கடை மட்டுமல்லாது நீர்நிலைகளிலும் நிரம்பி சுற்றுச்சுழலுக்கு கடும் மாசு ஏற்படுத்தி வருகிறது.
உடுமலை நகரில் சேகரிக்கப்படும் குப்பையில் குறிப்பிட்ட சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகளாகவே உள்ளது.
மேலும் நகரின் அருகிலுள்ள பாசன கால்வாய், குளம், ஓடை என முக்கிய நீர்நிலைகள் அனைத்தும் இத்தகைய அபாய கழிவுகளால் நிரம்பி வழிகின்றன.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றிய ஊராட்சிகளில், பிளாஸ்டிக் தடைக்கான கண்காணிப்பு மற்றும் ஆய்வு நடப்பதே இல்லை. மக்கள் தொகை அதிகமுள்ள கிராமங்களிலும், வாரச்சந்தைகளிலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் சாதாரணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
திடக்கழிவு மேலாண்மை திட்டமும், சுணக்கமடைந்துள்ள நிலையில், விவசாயத்தை பாதிக்கும் அளவுக்கு பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது.
பாசன கால்வாய்களில்தண்ணீர் திறப்பின் போது, கழிவுகளை அகற்றவே விவசாயிகள் போராட வேண்டிய நிலை உள்ளது.
கிராமப்புறங்களில் மழை நீர் மண்ணுக்குள் செல்ல தடையாக பிளாஸ்டிக் கழிவுகள் மாறி, விவசாயமும் பாதிக்கும் அபாயமுள்ளது.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம், தமிழக அரசின், பிளாஸ்டிக் பொருட்கள் தடை குறித்த உத்தரவை முழுமையாக செயல்படுத்தும் வகையில் சிறப்பு கண்காணிப்புக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






