என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை
    X
    கொலை

    ராஜபாளையம் அருகே பனை ஏறும் தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை- உறவினர்கள் வெறிச்செயல்

    பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் பனை ஏறும் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவிலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் பக்கம் உள்ள கோவிலூரை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் ராஜ்குமார் (வயது 28). பனையேறும் தொழிலாளி.

    அதே பகுதியை சேர்ந்தவர்கள் கணேஷ்குமார், ஆனந்தன். இவர்கள் 3 பேரும் உறவினர்கள் ஆவர். இந்த நிலையில் கணேஷ்குமார் மற்றும் ஆனந்தனிடம் ராஜ்குமார் பணம் கடன் வாங்கியுள்ளார்.

    அந்த பணத்தை வெகு நாட்களாகியும் திருப்பி கொடுக்காமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே பணம் கொடுக்கல்வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று இரவு ராஜ்குமார் வேலை முடிந்து தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். கோவிலூர் பகுதியில் சென்று கொண்டிருந்த அவரை கணேஷ்குமார் மற்றும் ஆனந்தன் ஆகிய இருவரும் வழிமறித்து உள்ளனர்.

    தங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை தருமாறு கேட்டு இருக்கின்றனர். அப்போது அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்களுக்கு இடையே கைகலப்பு உருவானது.

    அப்போது கணேஷ் குமார் மற்றும் ஆனந்தன் இருவரும் அரிவாளால் ராஜ்குமாரை சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட தகவல் கோவிலூர் பகுதியில் வேகமாக பரவியது.

    இதையடுத்து சம்பவ இடத்தில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இந்த கொலை குறித்து தகவல் அறிந்த சேத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் ராஜ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ராஜ்குமார் கொலை தொடர்பாக கணேஷ் குமார் மற்றும் ஆனந்தன் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறிலேயே ராஜ்குமாரை, கணேஷ்குமார் மற்றும் ஆனந்தன் ஆகிய இருவரும் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. இருந்தபோதிலும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தலைமறைவாக உள்ள கணேஷ்குமார் மற்றும் ஆனந்தனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இருவரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் பனை ஏறும் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவிலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×