search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    கொத்தமல்லி தழை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

    தேவை அதிகரிப்பால் கொத்தமல்லி தழையின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால்உடுமலை பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    உடுமலை:

    உடுமலை சுற்றுப்பகுதிகளில் முன்பு பருவமழையை ஆதாரமாகக்கொண்டு மானாவாரியாக மட்டும் கொத்தமல்லி சாகுபடி செய்து வந்தனர். 

    இச்சாகுபடியில், செடிகளில் இருந்து தானியம் மட்டும் பிரித்தெடுக்கப்படும். தழை விற்பனை செய்வது இல்லை. 

    இந்நிலையில் கொத்த மல்லி தழை தேவை அதிகரித்ததால், வீரிய ரக விதைகள் அறிமுகப்படுத்தப்பட்டு, தழை தேவைக்காக கொத்தமல்லி சாகுபடி செய்யும் முறை துவங்கியது. 

    தற்போது கிணற்றுப்பாசனத்துக்கு தென்னந்தோப்புகளில் ஊடுபயிராகவும், தனியாகவும், சுழற்சி முறையில் இதை சாகுபடி செய்கின்றனர். குறைந்த பரப்பளவிலும் இச்சாகுபடி செய்ய ஆர்வம் காட்டத்துவங்கியுள்ளனர்.

    இச்சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறியதாவது:-

    ஏக்கருக்கு 15 கிலோ வரை, கொத்த மல்லி விதை விதைப்பு செய்கிறோம். பார் பிடித்தல், தண்ணீர் பாய்ச்சுதல், களையெடுத்தல், உரமிடுதல் என ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக செலவாகிறது. 

    செடிகளை 45-50 நாட்கள் பராமரிக்கும் போது, தழை தேவைக்காக அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு, 4-5 டன் வரை விளைச்சல் கிடைக்கும். வியாபாரிகள் நேரடியாக விளைநிலங்களுக்கே வந்து அறுவடை செய்து செல்கின்றனர். 

    சாகுபடி செலவு குறைவு உள்ளிட்ட காரணங்களால் தொடர்ச்சியாக இச்சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம் என்றனர். கடந்த சில நாட்களாக கொத்தமல்லி தழை விலை உயர்ந்து வருகிறது. 

    தற்போது விவசாயிகளிடம், கிலோ 35-40 ரூபாய் வரை, நேரடியாக வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். 

    வரும் வாரங்களில் விலை மேலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
    Next Story
    ×