என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலங்குளத்தில் ஊசி போட்டதால் சிறுமி பலி- மெடிக்கல் உரிமையாளர் கைது
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் பவுல். இவரது மகள் ஜடா(வயது 7). கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 4ந்தேதி ஜடாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
உடனே அவரை அந்த பகுதியில் துத்திகுளம் சாலையில் உள்ள ஒரு மெடிக்கலுக்கு பவுல் அழைத்து சென்றுள்ளார். மெடிக்கல் உரிமையாளரான அண்ணா நகரை சேர்ந்த மனோகரன், அந்த சிறுமிக்கு காய்ச்சலுக்கு ஊசி போட்டுள்ளார்.
ஆனால் அந்த சிறுமி திடீரென இறந்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் போலி டாக்டரான மனோகரன் ஊசி போட்டதால் தான் சிறுமி இறந்தார் என்று ஆலங்குளம் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அந்த சிறுமியின் உடலை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியதில் அவர் ஊசி போட்டதில் தான் இறந்தார் என்பது தெரியவந்தது.
மேலும் அவர் உரிய மருத்துவம் படிக்காமல் ஊசி போட்டு வந்துள்ளார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவ சட்டப்பிரிவின் கீழ் போலி டாக்டரான மனோகரனை போலீசார் கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர்.






