என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலத்தில் கார் கவிழ்ந்து விபத்து: சென்னை சப்-இன்ஸ்பெக்டரின் மகன் பலி
சேலம்:
சென்னை ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ஆண்டனிதாஸ். இவரது மகன் அருண் (வயது 26), இவர் நண்பர்கள் 3 பேருடன் நேற்றிரவு சென்னையில் இருந்து ஒரு காரில் ஊட்டிக்கு புறப்பட்டார். காரை டிரைவர் அருள் ஓட்டினார்.
கார் இன்று அதிகாலை 5.30 மணியளவில் சேலம் குமரகிரி பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்ததது. அப்போது சாலையை கடந்த முதியவர் மீது கார் மோதாமல் இருக்க டிரைவர் காரை திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் திடீரென சாலையோரம் கவிழ்ந்தது.
இதில் காரில் இருந்த அருண் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். மற்றவர்கள் அனைவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் விபத்தில் இறந்த அருணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.