search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூண்டி ஏரி
    X
    பூண்டி ஏரி

    சென்னை குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கத்துக்கு 600 கன அடி தண்ணீர் திறப்பு

    புழல் ஏரி முழுவதுமாக நிரம்பியதால் மார்ச் 1ந் தேதி பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. அதேபோல் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரும் நிறுத்தப்பட்டது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

    அதன்படி கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பெய்த பலத்த மழைக்கு பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியதால் நவம்பர் 22ந் தேதி பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    அதன் பின்னர் புழல் ஏரி முழுவதுமாக நிரம்பியதால் மார்ச் 1ந் தேதி பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. அதேபோல் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரும் நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. மேலும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திரா அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

    மே முதல் வாரத்தில் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. இதையொட்டி தற்போது பூண்டி ஏரியில் இருப்பில் உள்ள தண்ணீரை புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பி வைத்து கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பெற உள்ள தண்ணீரை பூண்டி ஏரியில் முழுவதுமாக சேமித்துவைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதில் புழல் ஏரிக்கு வினாடிக்கு 300 கனஅடி வீதமும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம் நேற்று காலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 30.24 அடியாக பதிவானது. 1.795 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    புழல் ஏரியின் உயரம் 21.20 அடியாகும். 3,300 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். தற்நேபோது நீர்மட்டம் 19.39 அடி ஆக பதிவானது. 2,890 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 24 அடி ஆகும். இதில் 3,645 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். ஏரியின் நீர்மட்டம் 19.24 அடியாக பதிவானது. 2,420 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    Next Story
    ×