என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் பொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தி 2 மடங்கு அதிகரிப்பு

    2021 ஜூனில் நடந்த ஆய்வில் நோய் எதிர்ப்புத்திறன், 46 சதவீதமாக மட்டுமே இருந்தது.ஆகஸ்டுக்கு பின் படிப்படியாக தணிந்த இரண்டாவது அலை டிசம்பரில் ஓய்ந்தது.
    திருப்பூர்:

    கொரோனா தொற்றில் இருந்து மக்களை காக்க நோய் எதிர்ப்புத்திறன் எந்த அளவில் உள்ளது என்பதை அறிய, குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை  சுகாதாரத்துறை ஆய்வு நடத்துகிறது.

    தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் தொற்று பாதித்தவர்களிடம் பரிசோதனை நடத்தப்படுகிறது.

    அதன்படி நோய் எதிர்ப்புத்திறன் அதிகரித்துள்ளதாக, சுகாதாரத்துறை கண்டறிந்துள்ளது.முதல் அலை துவங்கிய 2020-ல் திருப்பூர் மாவட்ட மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி, 46 சதவீதமாக இருந்தது. இரண்டாம் அலை துவங்கி கொரோனா கோரதாண்டவம் ஆடி பல உயிர்களை காவு வாங்கியது. 

    கடந்த 2021 ஏப்ரலில் நோய் எதிர்ப்பு சக்தி 23 சதவீதமாக குறைந்தது. 

    மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறையினர், முன்கள பணியாளர், 60 மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டோர், தடுப்பூசி செலுத்திக் கொண்டதால், இரண்டாவது அலை ஓரளவு கட்டுக்குள் வந்தது. 

    2021 ஜூனில் நடந்த ஆய்வில் நோய் எதிர்ப்புத்திறன், 46 சதவீதமாக மட்டுமே இருந்தது. ஆகஸ்டுக்கு பின் படிப்படியாக தணிந்த இரண்டாவது அலை டிசம்பரில் ஓய்ந்தது. 5-ம் கட்ட ஆய்வு,  2021 டிசம்பரில் நடந்தது. 1,107 பேரிடம் நடத்திய ஆய்வில் 955 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்திருந்தது.

    முந்தைய ஆய்வில் 46 ஆக இருந்த, நோய் எதிர்ப்பு சக்தி கடைசி ஆய்வில் 86 சதவீதமாக அதிகரித்துள்ளதாலும், தொற்று வந்தால், எதிர்க்கொள்ளும் திறன் மக்களிடம் இருப்பதாக சுகாதாரத்துறையினர் நம்பியுள்ளனர்.

    இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்,

    ’முதல் அலையின் போது மக்களின் நோய் எதிர்ப்பு திறன் சராசரி அளவில் இருந்தது. இரண்டாவது அலையின் போது நோய் எதிர்ப்புத்திறன் குறைந்திருந்தது. பாதிப்பும் அதிகமாக இருந்தது.கொரோனா தடுப்பூசி செலுத்தியதன் பயனாக நோய் எதிர்ப்புத்திறன் இருமடங்கு அதிகரித்துள்ளது.

    விடுபட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தினால் கொரோனா தொற்று பரவினாலும் பாதிப்பு இல்லாமல் தற்காத்துக்கொள்ளலாம் என்றனர்.
    Next Story
    ×