search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    தொழிலாளர்களின் மதுபழக்கத்தால் பாதிக்கும் பனியன் உற்பத்தி

    திருப்பூரில் மட்டும் 110 மதுக்கடைகள் உள்ளன. மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மதுக்கடை செயல்படுகின்றன.
    திருப்பூர்:

    திருப்பூரில் இருந்து ஆண்டுக்கு ரூ. 50 ஆயிரம் கோடி அளவுக்கு உள்நாடு மற்றும் ஏற்றுமதி பின்னலாடை வர்த்தகம் நடக்கிறது.

    இன்றைய பின்னலாடை உற்பத்தியாளரில் பெரும்பாலானோர , தொழிலாளராக இருந்து, கடின உழைப்பால் தொழில்முனைவோராக மாறியவர்களே தொழிலாளரின் உழைப்பின்றி திருப்பூர் இத்தகைய சாதனையை ஈட்டியிருக்க முடியாது. 

    இந்தநிலையில் தொழிலாளர் பலர் மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர். 

    அவர்களது தொழில் திறன் பாதிக்கிறது என்று தொழில்முனைவோர், சமீபகாலமாக, வெளிப்படையாக புகார் கூறிவருகின்றனர்.

    திருப்பூரில் மட்டும் 110 மதுக்கடைகள் உள்ளன. மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மதுக்கடை செயல்படுகின்றன. ஆனால் பார் உள்ளிட்டவை வாயிலாக எந்த நேரத்திலும் மது கிடைக்கிறது என்பதே யதார்த்தம். காலை முதலே பலர் போதையில் மூழ்கிவிடுகின்றனர். 

    காலையில் பணிக்கு செல்வோர், மதியம் மதுக்கடையில் தஞ்சம் புகுகின்றனர். தொழிலாளர் பலர்  ‘டீ காசு’ என்பதை ‘கட்டிங்’ காசாக மாற்றிவிட்டனர் என்கின்றனர் தொழில்முனைவோர் பலர்.

    மது பழக்கத்தால் பனியன் தொழிலாளர்களின் உடல், மன நலன்கள் பாதிக்கப்படுகிறது. 

    குடும்ப பொருளாதாரம் கேள்விக்குறியாகிறது. அன்றாட செலவினம், குழந்தைகளின் கல்வி போன்ற அத்தியாவசிய தேவைக்கு கடன் வாங்கும் சூழலும், கடனுக்குமேல் கடன் வாங்கி திருப்பிச் செலுத்த முடியாமலும் தொழிலாளர்கள் பலர் தத்தளிக்கின்றனர். 

    இதுகுறித்தும் எல்.பி.எப்., பனியன் சங்க பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன்ரு கூறுகையில், 

    திருப்பூர் பனியன் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர். பெறும் சம்பளத்தில் கால் பங்கை மதுவுக்காகவே செலவிடுவது வேதனை அளிக்கிறது.

    எப்போது வேலை முடியும். மது அருந்தலாம் என்கிற மனநிலையில் உள்ளனர். 

    பணி முடிந்ததும், மது அருந்தி, மயக்க நிலையிலேயே செல்கின்றனர். இதனால் பனியன் தொழிலாளர் உடல் நலன், பணிகள் பாதிக்கப்படுகிறது. 

    குடிப்பழக்கத்திலிருந்து விடுபட நினைப்போரும் கூட, மிக எளிதாக கிடைப்பதால் மது அருந்திவிடுகின்றனர். தொழிலாளர்களையும், தொழிலையும் பாழ்படுத்தும் மதுவை, முற்றிலுமாக ஒழிக்கவேண்டும்.

    மது இல்லாத சமூகத்தை உருவாக்கவேண்டும்.ஆரோக்கியமான தொழிலாளர் சமுதாயத்தை உருவாக்கவேண்டும். கவுன்சிலிங் அளித்து மதுவின்பிடியிலிருந்து மீட்கவேண்டும். 

    திருப்பூரில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களுடன் ஆலோசித்து மதுக்கடைகள் எண்ணிக்கையை குறைப்பது குறித்த கோரிக்கைகளுடன் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்புவோம் என்றார்.

    இந்தநிலையில்  கடந்த சில ஆண்டுகளாக பீகார், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட வடமாநிலங்களைச  சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் வந்து திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் தங்கி பணி புரிந்து வருகின்றனர். 

    பின்னலாடை தொழில் மட்டுமின்றி அதை சார்ந்துள்ள அனைத்து தொழில்கள் மற்றும் ஓட்டல்கள், கட்டிட வேலை, பெட்ரோல் நிலையங்கள், துணிக்கடைகள் உள்பட அனைத்து துறைகளிலும் வடமாநில தொழிலாளர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. 

    வடமாநில ரெயில்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான இளைஞர்களும், இளம்பெண்களும் கூட்டம், கூட்டமாக திருப்பூர் வருவதை காண முடிகிறது. இதனால் தமிழக தொழிலாளர்களுக்கு இணையாக வடமாநிலத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது திருப்பூரில் உள்ள அனைவரது பேச்சாக உள்ளது. 

    தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களும், வடமாநிலத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் இருந்தும் திருப்பூரில் பல்வேறு துறைகளில் தொழிலாளர்கள் தட்டுப்பாடு இருந்து வருகிறது.

    பின்னலாடை ஏற்றுமதி, உள்நாட்டு பனியன் உற்பத்தி, பல்பொருள் அங்காடி, ஓட்டல்கள், நகைக்கடைகள், கட்டுமானம் மற்றும் என்ஜினீயரிங் நிறுவனங்கள் உள்பட பெரும்பாலான துறைகளில் ஊழியர் பற்றாக்குறை நிலவி வருகிறது. 

    இதன் காரணமாக திருப்பூரில் திரும்பிய திசையெல்லாம் ஆட்கள் தேவை என்ற பதாகைகள் தொங்க விடப்பட்டுள்ளன. 

    இன்னும் சில நிறுவனங்கள் இடைத்தரகர்கள் மூலமாக வடமாநில தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் மொத்தமாக அழைத்து வருகின்றனர். ஆனாலும் தொழிலாளர் பற்றாக்குறை என்பது தீர்ந்தபாடில்லை. 

    கடந்த சில நாட்களாக ஆட்கள் தேவை விளம்பரங்கள் இந்தி மொழியில் இடம் பெற்று வருகின்றன.

    திருப்பூரில் இத்தனை ஆண்டுகளாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே விளம்பரங்களும், விளம்பர பதாகைகளும் இருந்த நிலையில் தற்போது இந்தி மொழியில் உள்ள விளம்பரங்கள் அதிகரித்திருப்பது வடமாநிலத்தவரின் ஆதிக்கம் மேலோங்குகிறதா என்ற கேள்வி அனைவரிடையே எழுந்துள்ளது.

    இதுகுறித்து தொழிலதிபர் ஒருவர் கூறியதாவது:- 

    திருப்பூர் பின்னலாடை தொழில் என்பது மிகப்பெரிய கடல் போன்றது. 

    எத்தனை லட்சம் பேர் வேலை தேடி வந்தாலும் அத்தனை பேருக்கும் வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய இடத்தில் திருப்பூர் உள்ளது. 

    கடந்த சில ஆண்டுகளாகவே திருப்பூரில் வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 

    கொரோனா ஊரடங்கால் சொந்த ஊர்களுக்கு சென்ற வடமாநில தொழிலாளர்கள் திரும்பி வரவில்லை. இதன் காரணமாக தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. 

    தற்போது படிப்படியாக வடமாநில தொழிலாளர்கள் மீண்டும் திருப்பூருக்கு திரும்பி வருகின்றனர். 

    தற்போது உள்ள சூழலில் பெரும்பாலான நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் இருந்தால் மட்டுமே தொழில் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. 

    அந்த அளவிற்கு வடமாநிலத்தவர்களின் எண்ணிக்கையும், உழைப்பும் உள்ளது.  இன்றைய சூழலில் திருப்பூரில் ரெயில் நிலையம், பஸ் நிலையம், பூங்கா உள்ளிட்ட மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் 50 சதவீதத்திற்கு மேலாக வடமாநிலத்தவர்களே கண்ணில்படுகின்றனர். 

    இன்னும் ஒரு சில ஆண்டுகள் சென்றால் அவர்களது ஆதிக்கம் இன்னும் மேலோங்கும் என்றே கூறலாம்.

     இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×