என் மலர்
உள்ளூர் செய்திகள்

காயமடைந்த தொழிலாளிகள், இடிந்து விழுந்த மேற்கூரை
பழுதடைந்த தொகுப்பு வீட்டை இடித்தபோது காரைகள் பெயர்ந்து விழுந்து 3 பேர் காயம்
நரிமணத்தில் பழுதடைந்த தொகுப்பு வீட்டை இடித்தபோது காரைகள் பெயர்ந்து விழுந்து 3 பேர் காயமடைந்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் நாகூரை அடுத்த நரிமணம் ஊராட்சி கீழத்தெருவைச் சேர்ந்த தனபதி என்பவருக்கு சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடு ஒன்று உள்ளது. வீடு மிகவும் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் இருந்ததால் சுமார் 4 ஆண்டுகளாக அந்த வீட்டினை பூட்டி விட்டு அருகாமையில் தகர செட் அமைத்து அதில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் தனக்கு சொந்தமான பழுதடைந்த தொகுப்பு வீட்டை பணியாளர்கள் கொண்டு இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். நரிமணம் கீழத் தெருவை சேர்ந்த அழகு மூர்த்தி, அய்யாக்கண்ணு மற்றும் உத்தமசோழபுரத்தை சேர்ந்த சிங்காரவேல் ஆகிய மூவரும் வீடு இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் மேற்புற காரை பெயர்ந்து விழுந்தது. இதில் இடர்பாடுகளில் மூவரும் சிக்கினர். தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story






