search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    உடுமலை அரசு பள்ளிகளில் கற்பித்தல் பணி குறித்து பள்ளி கல்வி திட்ட இயக்குனர் ஆய்வு

    அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்துமே மாணவர்களை முழுமையாகச்சென்றடைந்துள்ளதா என்பது குறித்து மண்டலம் வாரியாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
    உடுமலை:

    அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. இதனை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

    அவ்வகையில், அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்துமே மாணவர்களை முழுமையாகச்சென்றடைந்துள்ளதா என்பது குறித்து  மண்டலம் வாரியாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கான பணியில், பள்ளிக் கல்வித்துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் ஈடுபட்டுள்ளனர். 

    அதன் ஒரு பகுதியாக உடுமலை கல்வி மாவட்டத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூடுதல் திட்ட இயக்குனர் ராமேஸ்வரமுருகன் தலைமையிலான குழுவினர், பூலாங்கிணறு அரசு துவக்கப்பள்ளி, துங்காவி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி, பழநிப்பாதை நகராட்சி துவக்கப்பள்ளி மற்றும் பழனியாண்டவர் நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆய்வு நடத்தினர்.

    இதில், கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, ஆசிரியர்களின் கற்பித்தல் முறை, வருகைப்பதிவு, மாணவர்களின் கற்றல் திறன் என பல்வேறு விபரங்கள் பரிசோதிக்கப்பட்டன.

    இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

    ஆய்வின் போது, குழந்தைகள் எந்த வகுப்பிலும் தேக்கமின்றி தொடர்ந்து படிக்கவும், ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெறவும் செய்ய வேண்டும்.

     பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மீது, முழு கவனம் செலுத்த வேண்டும் என ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

    மேலும் மாணவர்களுக்கு அரசால் அளிக்கப்படும் இலவச சலுகைகளை பெற்றுத்தர வேண்டும். இலவச பாடப்புத்தகம், சீருடை, பஸ் பாஸ் போன்றவற்றை உரிய காலத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    ஆசிரியர் வருகைப்பதிவேட்டை மிக சரியாக பராமரிக்க வேண்டும். வகுப்பறை, கற்றல் கற்பித்தலுக்கு உகந்த சூழல் உள்ளதாக அமைய வேண்டும். விடுப்பு, பிற பணி போன்றவற்றை உரிய நேரத்தில் பதிவு செய்ய வேண்டும் என பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன. 

    இவ்வாறு அவர் கூறினர்.

    ஆய்வின்போது உடுமலை கல்வி மாவட்ட அலுவலர் பழனிசாமி, துணை ஆய்வாளர்கள் கலைமணி, ரவி, ஆசிரியர்கள் ஜெயக்குமார், கார்த்திக் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
    Next Story
    ×