search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கிய லேப் டெக்னீசியன் உடல் 8 நாட்களுக்கு பிறகு மீட்பு

    கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கிய லேப் டெக்னீசியன் உடல் 8 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 58). இவர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீசியன் ஆக பணி புரிந்து வந்தார்.

    கடந்த 17-ந் தேதி மேட்டுப்பாளையத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் பவானிசாகர் வந்த ராஜேந்திரன் தொப்பம் பாளையம் கீழ்பவானி வாய்க்கால் பாலம் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி குளித்தார்.

    அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற ராஜேந்திரன் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி மாயமானார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக பாவனிசாகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீனவர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் ராஜேந்திரனை தேடி வந்தனர்.

    இவ்வாறாக ஒருநாள், இரண்டுநாள் இல்லை தொடர்ந்து 7 நாட்களாக ராஜேந்திரனை தேடினர். இந்நிலையில் நேற்று 8-வது நாளாக கீழ்பவானி வாய்க்காலில் ராஜேந்திரனை தேடும் பணி நடந்தது.

    தொப்பம்பாளையம் கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நம்பியூர் மூணாம் பள்ளி என்ற இடத்தில் கீழ் பவானி வாய்க்காலில் ராஜேந்திரன் உடல் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது தெரியவந்தது.

    இதனையடுத்து தீயணைப்புத்துறையினர் உடலை மீட்டனர். பின்னர் போலீசார் ராஜேந்திரன் உடலை பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து ராஜேந்திரன் உடல் அவரது உறவினரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.

    Next Story
    ×