search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்புகலூரில் மண் மாதிரி பரிசோதனை முகாம்.
    X
    திருப்புகலூரில் மண் மாதிரி பரிசோதனை முகாம்.

    மண் மாதிரி சேகரிப்பு செயல் விளக்கம்

    திருப்புகலூர் கிராமத்தில் மண் மாதிரி சேகரிப்பு செயல் விளக்கம் முகாம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் வட்டாரம் திருப்புகலூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையின் கீழ் இயங்கி வரும் நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தின் சார்பில் மண் மாதிரி சேகரித்தல் முகாம் நடைபெற்றது.

    முகாமினை ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். முகாமில் திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) கலைச்செல்வன் கலந்து கொண்டு மண் மாதிரி எடுத்தல் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்தும் மண்வள அட்டை பரிந்துரைப்படி உரமிடல் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.

    முகாமில் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் சுதா, மண் எடுத்தல் தருணம், சேகரம் செய்யும் முறை, கார் பங்கீட்டு முறையில் மண் மாதிரி சேகரித்தல், மண் மாதிரி எடுத்தல் குறித்து விவசாயிகளின் வயல்களில் செயல்விளக்கம் செய்து காண்பித்தார். 

    நெல், நிலக்கடலை, சிறு தானிய பயிர்களுக்கு அரை அடி ஆழத்திலும், பருத்தி, எள், காய்கறி பயிர்களுக்கு ஒரு அடி ஆழத்திலும் மண் மாதிரி எடுக்க வேண்டும், மண் மாதிரி ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 10 இடங்களில் ஆங்கில எழுத்து ‘வீ’ வடிவில் குழி எடுத்து அதன் பக்கவாட்டில் மண்ணை சுரண்டி எடுத்து கார் பங்கீட்டு முறையில் பிரித்து இறுதியில் அரை கிலோ மண் மாதிரியை துணிப்பையில் சேகரம் செய்ய வேண்டும்.

    துணி பையோடு விவசாயிகளின் பெயர், தகப்பனார் பெயர், முகவரி, புல எண், உட்பிரிவு எண், அலைபேசி எண், முன் சாகுபடி செய்த பயிர், பின் சாகுபடி செய்ய போகும் பயிர், பாசன ஆதாரம் போன்ற விவரங்கள் அடங்கிய விபரத்தை அனுப்பப்பட வேண்டும். முகாமில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    முகாமில் மண் பரிசோதனை நிலைய அலுவலர்கள், திருப்புகலூர் கிராமத்திற்கு உட்பட்ட உதவி வேளாண் அலுவலர் ஜெயராமன் ஆகியோர் உடனிருந்தனர். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் பவித்ரா செய்திருந்தார்.
    Next Story
    ×