என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
50 சதவீத கட்டண உயர்வு பவர் டேபிள் சங்கம் வலியுறுத்தல்
முதல் ஆண்டு 30 சதவீதம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தலா 15 சதவீதம் என மொத்தம் 75 சதவீதம் தையல் கட்டண உயர்வு கோரிக்கையை முன்வைத்து, விட்டுக்கொடுக்காமல் பேசிவந்தது பவர்டேபிள் சங்கம்.
திருப்பூர்:
திருப்பூரில் தையல் நிலைய உரிமையாளர் சங்கம் (பவர் டேபிள்) மற்றும் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) இடையே, பின்னலாடை தையல் கட்டண உயர்வு நிர்ணயிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.
8&வது சுற்று பேச்சுவார்த்தை, ஹார்வி ரோடு சிட்கோ வளாகத்தில் உள்ள ‘சைமா’ அரங்கில் நடந்தது.
இதில் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க(சைமா) தரப்பில் தலைவர் ஈஸ்வரன், பொதுச்செயலாளர் பொன்னுசாமி, செயற்குழு உறுப்பினர்கள் நடராஜ், பொன்னுசாமி பங்கேற்றனர்.
பவர்டேபிள் சங்கம் தரப்பில், தலைவர் நாகராஜ், செயலாளர் நந்தகோபால், துணை செயலாளர் முருகேசன், துணை தலைவர் பொன்சங்கர், பொருளாளர் சுந்தரம், செயற்குழு உறுப்பினர்கள் பழனிசாமி, மயில்சாமி பங்கேற்று விவாதித்தனர்.
முதல் ஆண்டு 30 சதவீதம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தலா 15 சதவீதம் என மொத்தம் 75 சதவீதம் தையல் கட்டண உயர்வு கோரிக்கையை முன்வைத்து, விட்டுக்கொடுக்காமல் பேசிவந்தது பவர்டேபிள் சங்கம். 8-வது சுற்று பேச்சுவார்த்தையில், பவர்டேபிள் துறையினர், எதிர்பார்க்கும் தையல் கட்டண உயர்வு விகிதத்தில் சற்று இறங்கிவந்து பேசினர்.
முதல் ஆண்டு 20 சதவீதமும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு தலா 10 சதவீதம் என 4 ஆண்டுகளில் மொத்தம் 50 சதவீதம் தையல் கட்டண உயர்வு வழங்குங்கள். தையல் நூல், தொழிலாளர் சம்பளம், சரக்கு போக்குவரத்து செலவினங்கள் உயர்ந்துள்ளன.
ஏற்கனவே டஜனுக்கு 6 ரூபாய் தையல் கட்டணம் உயர்த்தி இடைக்கால ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இடைக்கால ஒப்பந்த விகிதத்தை கழித்துதான் புதிய கட்டண உயர்வு வழங்குவீர்கள். 50 சதவீதத்துக்கும் குறைவான கட்டண உயர்வு பயனற்றது என்றனர்.
பவர்டேபிள் சங்க நிர்வாகிகள்.சைமா நிர்வாகிகளோ இதுகுறித்து எங்கள் உறுப்பினர்களிடம் ஆலோசித்து முடிவை சொல்கிறோம் என்று பதிலளித்தனர்.
இதையடுத்து பேச்சுவார்த்தை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.
Next Story






