என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரியூரில் கட்டப்பட உள்ள அறிவு சார் மையத்தின் மாதிரி படம்.
வேலூர் அரியூரில் ரூ2.50 கோடியில் அறிவு சார் மையம்
வேலூர் அரியூரில் ரூ2.50 கோடியில் அறிவு சார் மையம் அமைக்க பூமி பூஜை போடப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்காக தற்போது அறிவு சார் மையம் (நாலேஜ் ஸ்டடி சென்டர்) கட்டப்பட உள்ளது.
இதற்காக அரியூர் பழைய போலீஸ் நிலையம் இருந்த இடத்தில் 25 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அரியூரில் இன்று காலை அறிவு சார் மையம் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.
வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த் குமார், துணை மேயர் சுனில்குமார், கமிஷனர் அசோக்குமார், மண்டல குழு தலைவர் வெங்கடேசன் பகுதி செயலாளர்கள் அய்யப்பன், சங்கர்கணேஷ் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அறிவு சார் மையம் கட்டுவதற்காக பழைய போலீஸ் நிலையம் இருந்த கட்டிடம் மற்றும் அதன் அருகில் உள்ள பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட உள்ளன. அதில் சுமார் 25 சென்ட் இடத்தில் பசுமை வளாகத்தில் ரூ.2.50 கோடியில் நவீன முறையில் ஸ்டடி சென்டர் கட்டிடம் அமைய உள்ளது.
இந்த கட்டிடத்தில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் அனைத்து விதமான வயதினருக்கும் கல்வி சம்பந்தமான புத்தகங்கள் பொது அறிவு புத்தகங்கள் வைக்கப்பட உள்ளன.
மேலும் போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் எளிதில் வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு தேவையான அனைத்து விதமான புத்தகங்கள் இங்கு இடம் பெற உள்ளது. இந்த கட்டிடத்தில் முழுக்க குளிர்சாதன வசதி செய்யப்பட உள்ளது.
மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அமர்ந்து படிக்க கூடிய வகையில் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் குழந்தைகள் வசதிக்காக மாண்டிச்சோரி முறையில் கல்வி பெறவும் இந்த வளாகத்தில் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
மேலும் ஆன்லைன் மூலம் மாணவ மாணவிகள் தங்களது அறிவுத் திறனை வளர்க்கவும் இங்கு கம்ப்யூட்டர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படு கின்றன.
போட்டித் தேர்வுகள் நடைபெறும் நேரங்களில் தகுதியான ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். வளாகம் முழுவதும் பசுமையாகவும் காற்றோட்டமான சூழலை உருவாக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.
இதில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்கள் இலவசமாக சென்று பயன்பெறலாம். இன்னும் ஒரு வருடத்தில் இந்த அறிவு சார் மையம் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story






