என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை வசதி இல்லாததால் மாணவர்கள் மலைச்சாலையில் நடந்து செல்லும் காட்சி
    X
    சாலை வசதி இல்லாததால் மாணவர்கள் மலைச்சாலையில் நடந்து செல்லும் காட்சி

    சாலை வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் தவிப்பு

    தேனி அருகே சாலை வசதி இல்லாததால் மாணவர்கள் 5 கி.மீ. தூரம் நடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது
    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகே சிங்கராஜபுரம் ஊராட்சியில் கல்லுருண்டான்சுணை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. தவிர இந்த கிராமத்தை சுற்றிலும் கொட்டை முந்திரி, இலவம், எலுமிச்சை உள்ளிட்ட விவசாயங்கள் நடைபெற்று வருகிறது.

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கல்லுருண்டான்சுனை விலக்கில் இருந்து கல்லுருண்டான்சுனை கிராமம் வரை சுமார் 5 கி.மீ தூரத்திற்கு புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில் சாலையில் சுமார் 200 மீட்டர் தூரம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறி வனத்துறையினர் சாலை அமைக்கும் பணிகளுக்கு தடை விதித்தனர்.

    இதனால் குறிப்பிட்ட பகுதியை தவிர மற்ற இடங்களில் தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிந்தது. ஒன்றிய மற்றும் மாவட்ட அதிகாரிகள் பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தியும் தற்போது வரை அந்த பகுதியில் தார் சாலை அமைக்க வனத்துறையினர் அனுமதி வழங்கவில்லை. இதனால் கல்லுருண்-டான்சுனை கிராமத்திற்கு ஆட்டோ, லாரி உள்ளிட்ட எந்த வாகனங்களும் இயக்க முடியவில்லை. இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் விளைபொருட்களை மாட்டு வண்டிகளில் ஏற்றி கல்லுருண்டான்சுனை விலக்கு வரை கொண்டு வந்து அதன் பின்பு லாரிகள் மூலமாக தேனி, சின்னமனூர் உள்ளிட்ட சந்தைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டிய நிலை உள்ளது. இதே போல இந்த கிராமத்தில் இருந்து ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் சிங்கராஜபுரம், வருசநாடு உள்ளிட்ட அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

    சாலை வசதி இல்லாததால் பள்ளி மாணவ மாணவிகள் நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் 5 கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக தார்சாலை அமைக்கப்படாமல் இருந்த பகுதியில் அதிக அளவில் குண்டும் குழியுமாக மாறியது.

    இதனால் தற்போது மாட்டு வண்டிகளை கூட இயக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே தற்போது விவசாயிகள் விளைபொருட்களை கூலி ஆட்கள் மூலம் தலைச்சுமையாக தூக்கி வருகின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வனத்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கல்லுருண்டான்சுனை கிராமத்திற்கு தார்சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×