என் மலர்
உள்ளூர் செய்திகள்

அடிப்படை வசதிகளின்றி 108 ஆம்புலன்ஸ் பொது வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள்
பட்டுக்கோட்டையில் அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு உதவ நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டையில் ஆம்புலன்சை நிறுத்த இடம் இல்லாமலும், ஓய்வெடுக்க வசதி இல்லாமலும், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிதாபமான நிலையில் தவித்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம்
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் சார்பில் பொது மக்களுக்கு உதவும் வகையில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 108 ஆம்புலன்ஸ் சேவை
செயல்படுத்தப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில், பொதுமக்கள் அவசரச்சேவையில் இரண்டு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒரு ஆம்புலன்ஸ்
வாகனம் உள்ளூர் பகுதிக்கும், ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் தஞ்சை செல்வதற்கும் இயக்கப்பட்டு வருகிறது.ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்-திற்கு ஒரு வாகன ஓட்டுனர், ஒரு நர்ஸ் டெக்னிசியன் என இருவர்
பணியாற்றி வருகின்றனர். ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்கு ஒரு ஷிப்ட், என இரண்டு வாகனங்களுக்கும், 4 ஓட்டுனர்கள், 4 நர்ஸ் டெக்னீசியன்கள் பணியில் உள்ளனர். மேலும் வார விடுமுறையில்
பணியாற்றுவதற்கு ஒரு ஓட்டுனர் ஒரு செவிலியர் மாற்றுப் பணியில் உள்ளனர். பட்டுக்கோட்டையில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் ஆக மொத்தம் 10 பேர் பணியாற்றுகின்றனர்.பட்டுக்கோட்டையில்
108 ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்த தனியே இடமில்லாமல், பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் எதிரே உள்ள காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டு வருகிறது. காவல் நிலையத்திற்கு
அதிகாரிகள் வருகை அல்லது ஏதேனும் கூட்டம் நடைபெறும் போது, அங்கிருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தை அப்புறப்படுத்தும்படி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து விடுகின்றன.இதனால்
வாகனங்களை நிறுத்தி வைக்க இடமில்லாமல், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தவித்து வருகின்றனர். மேலும், 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர்கள், பணியில் உள்ள பெண் நர்ஸ் டெக்னீஷியன்கள்
ஓய்வெடுக்கவும், கழிப்பறை செல்லவும் எவ்வித அடிப்படை வசதியும் இன்றி தவித்து வருகின்றனர். இதனால் கொளுத்தும் வெயிலிலும், வெட்டவெளியில், வெயிலிலும், மழையிலும் நிறுத்தப்படும்
ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே ஓய்வெடுக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.மாவட்டத்தில் மற்ற இடங்களில் அரசு மருத்துவமனைகள், அரசு கட்டிடங்களில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்த
அனுமதி வழங்கப்பட்டு, ஓய்வெடுக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டையில், முன்பு இருந்த சப்-கலெக்டர், நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் (சமுதாயக் கூடம்) அனுமதி பெற்று,
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஓய்வெடுக்க வசதி செய்து கொடுத்திருந்தார். காலப்போக்கில், தற்போது நகராட்சி நிர்வாகத்தினர், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தி
உள்ளதாக கூறப்படுகிறது. இல்லையேல் வாடகை கொடுத்து தங்கிக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இதுகுறித்து மருத்துவத் துறையின் மாவட்ட நிர்வாகம், 108 மேல்
அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்-படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி
கூறுகையில், பட்டுக்கோட்டையில், பொதுமக்களுக்கான மருத்துவ சேவை, அவசர கால பணிகளில், 108 ஆம்புலன்சில் பணியாற்றும் ஆண், பெண் ஊழியர்கள் தங்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்தி
வைக்கவும், தாங்கள் ஓய்வெடுக்கவும், கழிப்பறைக்குச் செல்லவும் வழியில்லாமல் தவித்து வருகின்றனர். எனவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை
விடுத்துள்ளார்.
Next Story






