search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாதாள சாக்கடை திட்ட பணிகளை  கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் பார்வையிட்ட காட்சி
    X
    பாதாள சாக்கடை திட்ட பணிகளை கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் பார்வையிட்ட காட்சி

    பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிக்க வேண்டும்- கலெக்டர் உத்தரவு

    பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் உத்தரவிட்டார்.
    பொன்னேரி:

    பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான பணிகள் கடந்த 2013-ம் ஆண்டு 54 கோடியே 78 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.

    குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நடைபெற்று வரும் இந்த பணியை 2016-ம் ஆண்டுக்குள் முடிக்க வேண்டும்.

    ஆனால் குறித்த நேரத்தில் பணிகள் முடிக்க படாததால் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை காரணம் காட்டி திட்ட மதிப்பு ரூ.74 கோடியே 78 லட்சமாக அதிகரிக்கப்பட்டது. எனினும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் தரமற்ற கட்டுமான பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும், குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், பொன்னேரி நகராட்சியில் நடைபெறும் பாதாள சாக்கடை கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அவர் கொளுத்தும் வெயிலில் குடைபிடித்தபடி கட்டுமான பணி நடைபெறும் இடங்களை பார்வையிட்டார்.

    அப்போது பணிக்கு பயன்படுத்தப்படும் கட்டுமானப் பொருட்களின் தரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் உத்தரவிட்டார். இந்த பணி இந்த ஆண்டின் இறுதிக்குள் முடிக்கப்படும் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

    ஆய்வின்போது வடிகால் வாரிய செயற்பொறியாளர் வேல்முருகன், உதவி செயற்பொறியாளர் அமலதிபன், பொன்னேரி நகராட்சி ஆணையர் தனலட்சுமி, நகராட்சி துணைத்தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    இதைத்தொடர்ந்து கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ், பொன்னேரி அடுத்த வேண்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் வட்டாட்சியர் அலுவலகத்தை பார்வையிட்டார்.

    Next Story
    ×