search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விசாரணை
    X
    விசாரணை

    பெண் இன்ஸ்பெக்டர் புகார் எதிரொலி- உயர் அதிகாரி, தனிப்பிரிவு ஏட்டுவிடம் நடத்திய விசாரணை அறிக்கை தாக்கல்

    பெண் இன்ஸ்பெக்டர் நீலாவதி மீது புகார்கள் இருந்ததை அடுத்து அவரிடமும் தனியாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்து அறிக்கை உயர் அதிகாரிகளுக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் நீலாவதி (44). இவர் தனது குடும்பத்துடன் சூரம்பட்டி வலசு, காந்திஜி வீதியில் வசித்து வருகிறார்.

    கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்த இன்ஸ்பெக்டர் நீலாவதி கடந்த 14-ந் தேதி பணியில் இருந்தபோது திடீரென உயர் அதிகாரிகளின் செல்போனிற்கு தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி குறுஞ்செய்தி அனுப்பினார்.

    மேலும் அதில் தனது குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறும் அனுப்பி இருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த உயர் அதிகாரிகள் இன்ஸ்பெக்டர் நீலாவதியை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் முடியவில்லை.

    இந்நிலையில் சோலார் பகுதியில் உள்ள தனது தோழி வீட்டுக்கு இன்ஸ்பெக்டர் நீலாவதி மொபட்டில் சென்றார். அப்போது அவர் திடீரென கீழே மயங்கி விழுந்தார்.

    இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பினார்.

    இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் நீலாவதி பேசிய பரபரப்பு ஆடியோ வெளியானது. அதில் உயரதிகாரிகள் திட்டியதால் மனவேதனை அடைந்து தற்கொலை செய்யப்போவதாக குறுஞ்செய்தி அனுப்பியது உண்மைதான். எனது இந்த முடிவுக்கு ஒரு போலீஸ் உயர் அதிகாரி மற்றும் தனிப்பிரிவு ஏட்டு ஒருவரும் தான் காரணம்.

    அந்த உயர் அதிகாரி சமுதாய ரீதியில் அரசியல் செய்கிறார். அந்த ஏட்டுவை ஒரு முறை நான் திட்டியதால் என்னை பழி வாங்குவதற்காக என்னை பற்றிய தவறான தகவலை உயர் அதிகாரிகளிடம் சொல்லி வருகிறார்.

    இவர்களின் செயலால் தான் என்னை ஆயுதப்படைக்கு போக சொன்னார்கள். மேலும் எனக்கு வழங்கப்பட்ட வாகனத்தையும் பறித்துக் கொண்டனர். இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தான் நான் தற்கொலைக்கு முயன்றேன் என்று அதில் கூறி இருந்தார்.

    இதனால் இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் இதுகுறித்து விசாரணை நடத்த டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டார்.

    இதையடுத்து டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் விசாரணைக் குழுவினர் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரி, தனிப்பிரிவு ஏட்டு ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதேப்போல் இன்ஸ்பெக்டர் நீலாவதியிடமும் விசாரணை நடத்தினர்.

    இரண்டு தரப்பினரிடமும் விசாரணையை முடித்து அதன் அறிக்கையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனிடம் தாக்கல் செய்தனர்.

    இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறியதாவது:-

    பெண் இன்ஸ்பெக்டர் நீலாவதி தெரிவித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரி மற்றும் தனிப்பிரிவு ஏட்டு ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடைபெற்றது.

    இதேபோல் பெண் இன்ஸ்பெக்டர் நீலாவதி மீதும் புகார்கள் இருந்ததை அடுத்து அவரிடமும் தனியாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்து அந்த அறிக்கை உயர் அதிகாரிகளுக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் உயர் அதிகாரிகள் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பார்கள். அது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உயர் அதிகாரி, தனிப்பிரிவு ஏட்டு மீது புகார் தெரிவித்த இன்ஸ்பெக்டர் நீலாவதி இதுவரை பணிக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×