என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூரில் லாரி மோதி 2 பேர் பலி
திருவள்ளூர்:
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 35). ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். செங்கம், சந்தவாசல் பகுதியை சேர்ந்தவர் பிரவீன்சோப்ரா (32).
இவர் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர்கள் இருவரும் அக்காள்- தங்கையை திருமணம் செய்து உள்ளனர். செல்வகுமார் திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியில் ராஜாஜி தெருவில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். பிரவீன் சோப்ரா போரூர், ராமகிருஷ்ணா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் பிரவீன் சோப்ரா மணவாள நகரில் உள்ள செல்வகுமார் வீட்டிற்கு சென்றார். பின்னர் இரவு இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் ரெயில்வே மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தனர். பெரியகுப்பம் இறக்கத்தில் சென்ற போது பின்னால் திருவள்ளூர் நோக்கி வேகமாக சென்ற டிப்பர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த 2 பேர் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. சம்பவ இடத்திலேயே செல்வகுமாரும், பிரவீன் சேப்ராவும் பரிதாபமாக பலியானார்கள்.
விபத்து நடந்ததும் லாரி டிரைவர் வண்டியை அங்கேயே விட்டு, விட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பாபி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரவீன்குமார், செல்வகுமார் ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகிறார்கள். ஒரே நேரத்தில் அக்கா, தங்கை கணவர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






