search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அரசு தடையின்றி குறைந்த விலைக்கு பட்டு நூல் வழங்க வேண்டும் - கைத்தறி நெசவாளர்கள் வலியுறுத்தல்

    நெசவு செய்யப்படும் துணிகள், தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிக அளவில் அனுப்பப்படுகிறது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், பல்லடம், அவிநாசி, காங்கயம், உடுமலை உள்ளிட்ட நகரங்கள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். பட்டு சேலை, சேலை, துண்டு, சட்டை, வேஷ்டி, மெத்தை விரிப்பு என மாதம் 7 முதல், 9 கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    நெசவு செய்யப்படும் துணிகள், தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிக அளவில் அனுப்பப்படுகிறது. உழைப்பிற்கேற்ப ஊதியம் இன்மை, பட்டு நூல் பற்றாக்குறை, கைத்தறி ஆடையில் மக்களிடம் ஆர்வம் குறைவு போன்றவற்றால், கைத்தறி துணி உற்பத்தி குறைந்து வருகிறது.

    இதுகுறித்து எஸ்.ஆர்.டி., கைத்தறி நெசவாளர் சங்க உறுப்பினர் சவுந்தரராஜன், கூறியதாவது:

    நெசவுத்தொழில் குடும்ப சகிதமாக மேற்கொள்ளப்படும் கடினமான தொழில். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை. இதனால் பலர் அதிக வருமானம் கிடைக்கக்கூடிய பனியன் உள்ளிட்ட வேறு தொழிலுக்கு சென்று விடுகின்றனர்.

    கைத்தறியில் ஒரு சேலை நெய்ய 3 நாள் ஆகிறது. அதே நேரத்தில் விசைத்தறியில் ஒரு நாளில் 5 சேலைகள் உற்பத்தி செய்யலாம். சிலர் விசைத்தறி சேலையை கைத்தறி சேலை என விலை குறைத்து விற்கின்றனர். 

    இதனால் கைத்தறி விற்பனை பாதிக்கிறது. கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட ரகத்தை கைத்தறியில் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும். ஆனால் விசைத்தறியில் செய்கின்றனர். இதனால் எங்களுக்கு உற்பத்தி பாதிக்கிறது.

    படித்த இளைஞர்கள் இத்தொழிலில் ஈடுபடுவதில்லை. அவர்கள் படிப்புக்கேற்ற அதிக வருமானம் வரக்கூடிய தொழிலுக்கு சென்று விடுகின்றனர். இதனால் இத்தொழிலில் படித்த இளைய தலைமுறையினரை பார்க்க முடியவில்லை.இவ்வாறு சவுந்தரராஜன் கூறினார்.

    கோவை, திருப்பூர், மாவட்ட நெசவாளர் கூட் டுறவு சங்கங்களின் சம்மேளன தலைவர் ஜெகநாதன், கூறியதாவது:

    கைத்தறிக்கு தேவையான பட்டு முன்பு சீன நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அப்போது ஒரு கிலோ பட்டு நூல் 3 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது இறக்குமதி நிறுத்தப்பட்டதால் தற்போது பட்டு நூலின் விலை ஒரு கிலோ 7 ஆயிரத்து 800 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த அளவுக்கு விலை உயர்த்தி பட்டு வாங்கி சேலை உற்பத்தி செய்து அதை விற்பது கடினம்.

    இதனால் உற்பத்தி பாதிக்கிறது. அரசு தடையின்றி குறைந்த விலைக்கு பட்டு நூல் வழங்க வேண்டும். கைத்தறி தொழிலாளர்களுக்கு அரசு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு ஜெகநாதன் கூறினார்.

    மதிப்புக்கூட்டு துணிகள் நெசவு, ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை ஆராய்தல், புதுமை படைப்புகள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தால், கைத்தறி நெசவு உயிர் பெறும். இதற்கு, இளம் தலைமுறையினர் இத்தொழிலில் கால்பதிக்க வேண்டும். ஆனால் இதற்கு தேவையான முயற்சி முக்கியமானது. கைத்தறி நெசவு இதன் மூலம் சிறக்கும் என்கின்றனர் மூத்த நெசவாளர்கள்.
    Next Story
    ×