
தமிழக கேரள எல்லையில் தேனி மாவட்டம் லோயர் கேம்ப் அருகே மங்கலதேவி கண்ணகி கோவில் உள்ளது. 2000ம் ஆண்டுகளுக்கு முன்பு சேரன் செங்குட்டுவனால் மங்கலம் செய்து தொடங்கி வைக்கப்பட்ட இந்த கோவில் அதனைத் தொடர்ந்து ராஜ ராஜ சோழனால் புனரமைக்கப்பட்டதற்கான கல்வெட்டு குறிப்புகள் உள்ளது.
இங்கு ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமியன்று கண்ணகிக்கு வழிபாடு நடத்தப்படும். ஆனால் இந்த கோவில் அமைந்துள்ள இடம் கேரளாவில் உள்ளதாக கூறி அம்மாநில அரசு தொடர்ந்து தமிழகத்தில் இருந்து பக்தர்கள் செல்ல இடையூறு ஏற்படுத்தி வந்தது.
இரு மாநில அரசு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கு பின்பு வருடத்தில் ஒரு நாள் மட்டும் பளியங்குடியில் இருந்து நடந்து சென்று கண்ணகி கோவிலில் வழிபட்டு வருகின்றனர்.
அதன்படி இன்று கோவிலுக்கு பக்தர்கள் அதிகாலை முதலே வரத் தொடங்கினர். கோவில் முன்பு பா.ஜ.க. மாநில விவசாய அணி தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் மகளிர் அணி தலைவி மீனாட்சி, 5 மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ஆர்.தேவர் மற்றும் பா.ஜ.க. இந்து முன்னணி நிர்வாகிகள் பங்கேற்ற போராட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அவர்கள் கோவிலுக்கு வந்த பக்தர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தினர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில், கண்ணகி கோவிலின் இருப்பிடம் தமிழகத்தில்தான் உள்ளது என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. இது குறித்து தமிழகத்தின் சார்பிலும், இரு மாநில அதிகாரிகள் நடத்திய ஆய்விலும் தெளிவான உண்மை வெளி வந்தது. இருந்தபோதும் கேரள அரசு இது தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறி பக்தர்கள் வழிபாடு செய்வதற்கு தடை ஏற்படுத்தி வருகின்றனர்.