
தேனி மாவட்டம் பெரியகுளம்அருகில் உள்ள வடகரை கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 38). சம்பவத்தன்று தனது வீட்டருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது 3 வாலிபர்கள் அவரை வழி மறித்து அவர் வைத்திருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு ஓடினர்.
பின்னர் அவர்கள் செல்போனை விற்பனை செய்து அதன் மூலம் கிடைத்த பணத்தை பங்கு போடுவதற்காக பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு முற்றியது. இதில் ஒருவருக்-கொருவர் தாக்கிக் கொண்டனர்.
மேலும் 2 வாலிபர்களை கத்தியால் குத்திவிட்டு மற்றவர்கள் தப்பியோடி விட்டனர். கத்திக்குத்தில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களைஅக்கம் பக்கத்தினர் மீட்டு பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில் காயமடைந்தவர்கள் வடகரை அழகர்சாமிபுரத்தை சேர்ந்த இஸ்ரேல், சூர்யா என தெரியவந்தது. இவர்கள் தாங்கள் திருடிய செல்போனை வேறு ஒருவரிடம் விற்றுவிட்டு அந்த பணத்தை பங்கு போடுவதில் தகராறு ஏற்பட்டு காயமடைந்தவர்கள் என தெரியவந்தது.
முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.