
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர் குறிஞ்சிப்பூ தெருவில் வசித்து வருபவர் வேலாயுதம். இவர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் 2-வது தெர்மலில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் தனது மனைவியுடன் கடந்த வாரம் சென்னையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக சென்றிருந்தார். இன்று அதிகாலை வேலாயுதம் ஊர் திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை கண்ட வேலாயுதம் அதிர்ச்சியடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவும் உடைக்கப்பட்டு திறந்துகிடந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த 22 பவுன் தங்க நகைகள் மற்றும் ½ கிலோ வெள்ளி நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து விருத்தாசலம் போலீசில் வேலாயுதம் புகார் செய்தார்.
போலீசார் மோப்பநாயுடன் விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்.எல்.சி. அதிகாரி வீட்டில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.