என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்தியமங்கலத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ள காட்சி
    X
    சத்தியமங்கலத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ள காட்சி

    திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை- சத்தியமங்கலம், தாளவாடியில் கடைகள் அடைப்பு

    வாகனங்கள் பல மணி நேரம் காத்திருப்பதால் உணவு கூட கிடைக்க முடியாமல் தவித்து வருவதாக கூறி பண்ணாரி சோதனை சாவடியை முற்றுகையிட்டு பொதுமக்கள், வியாபாரிகள், லாரி ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை திண்டுக்கல்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கிய சாலையாக விளங்கி வருகிறது.

    இந்த மலைப்பாதை வழியாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே சரக்கு மற்றும் வாகன போக்குவரத்து நடைபெறுவது வருகிறது.

    இந்நிலையில் வன விலங்குகளின் பாதுகாப்பு கருதி திம்பம் மலைப் பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 10-ந்தேதி முதல் திம்பம் மலைப்பாதையில் இரவுநேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

    அதன்படி மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் காய்கறிகள், உணவு பொருட்கள் கொண்டு வருவதில் தாமதம் ஏற்படுவதாக கூறியும்,

    வாகனங்கள் பல மணி நேரம் காத்திருப்பதால் உணவு கூட கிடைக்க முடியாமல் தவித்து வருவதாக கூறி பண்ணாரி சோதனை சாவடியை முற்றுகையிட்டு பொதுமக்கள், வியாபாரிகள், லாரி ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினார்கள். ஆனாலும் இரவு நேர போக்குவரத்து தடை தொடர்ந்தது.

    இந்நிலையில் திம்பம் மலைப்பாதையில் தடை செய்யப்பட்ட போக்கு வரத்தின் காரணமாக தாளவாடி மலைப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கில் கடந்த 6-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் திம்பம் மலைப்பாதை வழியாக விவசாய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள், மருத்துவம் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் அடையாள அட்டையை காண்பித்து 24 மணி நேரமும் திம்பம் மலைப்பாதையில் பயணிக்கலாம் என்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    மேலும் 12 சக்கர லாரிகள் மற்றும் 16.2 டன்னுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வரும் லாரிகள் திம்பம் மலைப்பாதை வழியாக செல்ல அனுமதி இல்லை எனவும், வாகனங்கள் 30 கி.மீ வேகத்தில் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டது.

    ஏற்கனவே வழங்கிய தீர்ப்பில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 சக்கர லாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வழங்கிய தீர்ப்பில் 12 சக்கர லாரிகளுக்கு எப்போதும் அனுமதி இல்லை என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதனால் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவதாக கூறி நேற்று முன்தினம் அனைத்து வணிகர்கள் சங்கம் மற்றும் அனைத்து கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    அதில் இன்று சத்தியமங்கலம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் எனவும், ஈரோடு மாவட்டம் முழுவதும் லாரிகள் ஓடாது எனவும், பண்ணாரி சோதனை சாவடியில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்திருந்தனர்.

    அதன்படி சத்தியமங்கலம் முழுவதும் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. சத்தியமங்கலம் முழுவதும் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோட்டுவாம்பாளையம், வடக்கு பேட்டை, திப்புசுல்தான் ரோடு, சத்தியமங்கலம் பஸ் நிறுத்தம், காந்திநகர், எஸ்.ஆர்.டி. கார்னர், அரியப்பம்பாளையம் போன்ற பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு காணப்பட்டன.

    எனினும் பால், மருந்தகம், ஆஸ்பத்திரிகள் வழக்கம் போல் செயல்பட்டன. சத்தியமங்கலம் முழுவதும் ஆட்டோக்கள், லாரிகளும் ஓடவில்லை. இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டம் காரணமாக பல கோடி வர்த்தகம் முடங்கியுள்ளது. சத்தியமங்கலம் முழுவதும் முக்கியமான வீதிகளில் கடையடைப்பு போராட்டம் தொடர்பாக சுவரொட்டிகள் இடம்பெற்று இருந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சத்தியமங்கலம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    இதேப்போல் திம்பம் மலைப்பாதை மற்றும் தாளவாடி பகுதிகளிலும் இரவு நேர போக்குவரத்து தடையை கண்டித்து 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சத்தியமங்கலம்- தாளவாடியில் கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பேருந்து சேவைகள் வழக்கம்போல் நடந்தது. ஆனாலும் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

    Next Story
    ×