search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூதாட்டி கருகி சாவு
    X
    மூதாட்டி கருகி சாவு

    வீட்டில் தீ பிடித்து மூதாட்டி கருகி சாவு

    திருப்பத்தூர் அருகே வீட்டில் தீ பிடித்து மூதாட்டி கருகி இறந்தார்.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே  தெக்கூர் கிராமத்தில் உள்ள மேல தெருவைச் சேர்ந்தவர் காசி (வயது 90). இவரது மனைவி வள்ளி (80). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். தனியாக வசித்து வந்த கணவன்- மனைவி இருவரும் வயது மூப்பு காரணமாக சிரமப்பட்டு வந்தனர்.

    நேற்று இரவு இருவரும் வழக்கம்போல் வீட்டில் தூங்கினர். நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் மின் கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது சிறிது நேரத்தில் தீ பற்றி வீடு முழுவதும் பரவ தொடங்கியது. இதன் காரணமாக வீடு முழுவதும் புகை மண்டலமாக மாறியது.

    இதனால் திடுக்கிட்டு எழுந்த காசி, அவரது மனைவி வள்ளி ஆகியோர் இருட்டில் வெளியேற முடியாமல் அலறினர். வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்ததன் காரணமாக அவர்களால் வாசல் பகுதியை நெருங்கி கதவை திறக்க முடியவில்லை. இதனால் கூக்குரலிட்டபடியே செய்வதறியாது முதிய தம்பதியினர் தவித்தனர்.

    இந்த நிலையில் தீ வேகமாக பரவியதில் காசி-வள்ளியின் ஆடையில் தீ பற்றியது. சிறிதுநேரத்தில் தீ உடல் முழுவதும் பரவியது. வலியால் 2 பேரும் அலறித்துடித்தனர்.

    வீட்டிலிருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் ஆனந்த் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது வள்ளி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்திருந்தார். 

    தீக்காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த காசியை வீரர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. தீ விபத்தில் அவர்களது ஓட்டு வீடு முற்றிலும் எரிந்து தீக்கிரையானது.

    இந்த சம்பவம் தொடர்பாக நெற்குப்பை போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் மருது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலைய அலுவலர் ஆனந்த் கூறுகையில், மின் கசிவு ஏற்பட்ட உடனேயே கணவன், மனைவி  வெளியேறி இருந்தால் உயிர் பிழைத்து இருக்கலாம். ஆனால் வயது மூப்பு காரணமாகவும், இரவு நேரம் என்பதாலும் அவர்களால் வீட்டிலிருந்து வெளியேற முடியாமல் தவித்துள்ளனர். எனவே வயோதிக காலத்தில் அவர்களைப் பாதுகாப்பான இடத்தில் குடும்பத்தினர் தங்க வைக்க வேண்டும் என்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×