search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் மா.சுப்பிரமணியன்
    X
    அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    தமிழகத்தில் புதிய வகை கொரோனா ‘எக்ஸ் இ’ இல்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

    தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பரிசோதனை செய்யப்பட்டு வந்தாலும், சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தி உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
    சென்னை:

    உலக சுகாதார தினத்தையொட்டி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், உணர்திறன் ஒருங்கிணைப்பு பூங்காவிற்கு அடிக்கல் நாட்டியும் மற்றும் மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவுகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

    அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ஸ்டான்லி மருத்துவமனையில் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் லிப்ட் வசதியும், ரூ.3.5 லட்சம் ரூபாய் செலவில் உடற்பயிற்சி கூடமும் இன்றைய தினம் திறக்கப்பட்டுள்ளது.

    மேலும் பேரவையில் அறிவித்தபடி தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் 364.22 கோடி மதிப்பில் தீவிர சிகிச்சை பிரிவில் கூடுதல் படுக்கை வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளில், 1583 படுக்கைகள் கூடுதலாக அமைத்திட ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 14-ந் தேதி அண்ணா நகரில் உள்ள சித்த மருத்துவ பல்கலைக்கழக திறப்பு விழாவின் போது துவக்கி வைக்கிறார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

    நேற்று மும்பையில் ஒருவருக்கு எக்ஸ்இ வகை தொற்று என்று கூறப்பட்ட நிலையில், அவருக்கு அந்த வகை தொற்று இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது என்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய அமைச்சர், தமிழகத்தில் புதிய வகை தொற்று எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.

    எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பரிசோதனை செய்யப்பட்டு வந்தாலும், சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

    அதேபோல் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று  எண்ணிக்கை சில மாவட்டங்களில் கணிசமாக அதிகரித்து வரும் சூழ்நிலையில், இதனை கண்காணிக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுதப்பட்டுள்ளது என்றார். குறிப்பாக திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதாக குறிப்பிட்ட அவர், தொடர்ந்து உறுதி செய்யப்படும் மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது என்று கூறினார்.

    Next Story
    ×