என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாமல்லபுரம் புலிக்குகையை சுற்றி தோண்டப்பட்டுள்ள காட்சி
    X
    மாமல்லபுரம் புலிக்குகையை சுற்றி தோண்டப்பட்டுள்ள காட்சி

    அலங்கார பணிகளை மேற்கொள்வதால் மாமல்லபுரம் புலிக்குகை சேதமடையும் அபாயம்

    மாமல்லபுரம் புலிக்குகை சிற்பத்தின் அருகில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் சிற்பம் சேதமடையும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் ஐந்து ரதம், கடற்கரை கோவில், அர்ஜூனன் தபசு, சாலுவான் குப்பம், புலிக்குகை உள்ளிட்ட பல்லவர் காலத்து சிற்பங்கள் உள்ளன.

    இந்த பாரம்பரிய சிற்பங்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதால் தொல்லியல் துறை பாதுகாப்பாக பராமரித்து வருகிறது. இந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

    மேலும் சிற்பங்களின் பாதுகாப்புக்காக சிற்ப வளாகங்களில் நவீன எந்திரங்கள் மூலம் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

    இந்த நிலையில் சாலுவான் குப்பம் பகுதியில் அமைந்துள்ள புலிக்குகை சிற்ப வளாகத்தில் தொல்லியல் துறை சார்பில் அலங்காரம் சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இதற்காக புலிக்குகை சிற்பத்தின் மிக அருகில் அதிர்வு ஏற்படும் வகையில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக புலிக்குகை சிற்பம் சேதமடையும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    மாமல்லபுரத்தில் சிற்பங்கள் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் மனித உழைப்பின் மூலம் தளவாடங்களை பயன்படுத்தி மட்டுமே பணிகளை மேற்கொள்ள வேண்டும். அகழ்வாராய்ச்சி பணிகளும் இந்த விதிகளை பின்பற்றியே நடக்கிறது.

    ஆனால் குடவரை சிற்பமான புலிக்குகை மற்றும் சுனாமியின் மூலம் கண்டறியப்பட்ட முருகன் கோவில் அருகே அலங்கார பணிகளை மேற்கொள்வதாக கூறி சிற்பங்களுக்கு அதிர்வை ஏற்படுத்தும் வகையில் பொக்லைன் எந்திரம் மூலம் பணிகளை செய்து வருகிறார்கள். இதனால் புலிக்குகை சேதம் அடையுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே தொல்லியல் துறை உயர் அதிகாரிகள் இந்த சிற்பங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×