search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சாரம்
    X
    மின்சாரம்

    தமிழகத்தில் கோடையில் மின்வெட்டு வராது- மின்வாரியம் தீவிர நடவடிக்கை

    கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே மின்சார தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக நேற்று 16 ஆயிரத்து 481 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மின்வாரிய உயர் அதிகாரி கூறினார்.
    சென்னை:

    தமிழகத்தில் கோடைகாலம் ஆரம்பித்து விட்டதால் பொதுமக்களின் மின்சார பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    மக்கள் பயன்படுத்தும் மின்சாரத்தின் தேவை உச்சபட்சமாக 14 ஆயிரம் மெகாவாட் இருந்த நிலை மாறி இப்போது 17,500 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் பயன்பாட்டில் உள்ளது. இது இன்னும் அதிகரிக்கக்கூடும் என்பதால் மின்வாரியம் பல்வேறு வழிகளில் மின் உற்பத்தியை அதிகரித்து வருகிறது.

    இதுகுறித்து மின்வாரிய உயர் அதிகாரி கூறியதாவது:-

    கோடைகாலம் வந்தால் பெரும்பாலான வீடுகளில் மின்விசிறி, ஏ.சி., ரெப்ரிஜிரேட்டர் ஆகியவற்றை அதிகம் உபயோகப்படுத்துவது உண்டு.

    அந்த வகையில் இப்போது தமிழகத்தில் அதிக அளவு மின்சாரம் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு ஒரு நாளைக்கு 14 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் தேவைப்பட்டது. ஆனால் இப்போது 17,500 மெகாவாட் அளவுக்கு மக்கள் உபயோகப்படுத்தி வருகின்றனர். இதை சமாளிக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

    கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடந்த ஆண்டு கோடை காலத்தில் வணிக நிறுவனங்கள் தொழிற்சாலைகள், அலுவலகங்கள் சரிவர செயல்படாத காரணத்தால் மின்சார தேவை மிக குறைவாகவே இருந்து வந்தது.

    குறிப்பாக வீடுகளில் மட்டும் மின்சாரம் பயன்படுத்தப்பட்டதால் ஆயிரம் மெகாவாட்டுக்கு கீழே தேவை ஏற்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அப்படி இல்லை. கொரோனா கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதால் மின் சாதனங்களை பயன்படுத்தும் அனைத்து தொழில்களும் இயங்கி வருகிறது.

    இதன் காரணமாக கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே மின்சார தேவை அதிகரித்து விட்டது.

    குறிப்பாக நேற்று 16 ஆயிரத்து 481 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் நமக்கு 17,400 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி கிடைத்து வருவதால் நிலைமையை சமாளித்து விடுகிறோம்.

    ஆனால் மின் நிலையங்கள் மூலம் தினமும் 3,500 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. அனல்மின் நிலையம் மூலம் 700 மெகாவாட் கிடைத்து விடுகிறது. சோலார் மூலம் 3,500 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது.

    காற்றாலை மூலம் 400 மெகாவாட் கிடைக்கிறது. ஏப்ரல் கடைசியில் இருந்து 4000 மெகாவாட் வரை இதன் உற்பத்தி கிடைக்கும். இது தவிர வெளி மாநிலங்களில் இருந்தும் மின்சாரம் கிடைத்து வருகிறது.

    இதனால் மின் தேவையை எளிதில் சமாளித்து வருகிறோம். இது தவிர முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சோலார் மூலம் 1000 மெகாவாட் மின்சாரம் யூனிட் ரூ.2.61-க்கு வாங்குவதற்கு ராஜஸ்தான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 6 மாத காலத்திற்குள் இது செயல்பாட்டுக்கு வந்து விடும்.

    எனவே எதிர்கால தேவையை கருத்தில் கொண்டும் இப்போதே அதற்கான மின் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதிகபட்ச மின்தேவையை நாம் இப்போது சமாளித்து வருவதால் தமிழ்நாட்டில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை.

    மின் தேவை அதிகரித்தாலும் அதனை சமாளிப்பதற்காக உற்பத்தியை அதிகரிக்கும் திறன்மின் வாரியத்திடம் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.



    Next Story
    ×