search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெற்றோருடன் சிறுமி
    X
    பெற்றோருடன் சிறுமி

    நோயும் தெரியாமல் தீர்வும் கிடைக்காமல் 10 வயது சிறுமியுடன் பரிதவிக்கும் தொழிலாளி

    நோயும் தெரியாமல், அதற்கு என்ன சிகிச்சை என்பதும் புரியாமல் இக்கட்டான நிலையில் எங்கள் குழந்தையோடு ஒவ்வொரு நாளையும் கழித்து வருகிறோம் என்று பெற்றோர் வேதனையுடன் தெரிவித்தனர்.
    கண்ணான கண்ணே... கண்ணான கண்ணே! என் மீது சாய வா. புண்ணான நெஞ்சை பொன்னான கையால் பூப்போல நீவ வா...

    -இது வெறும் பாடல் அல்ல.

    ரணமாகி போன ஒரு தந்தையின் இதயத்துக்கு தன் குழந்தையின் தளிர் கரங்கள் மருந்து தடவாதா என்ற ஏக்கத்தின் வெளிப்பாடு.

    “சினிமாவுக்காக எழுதப்பட்ட பாடல் வரிகளாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையிலும் பலர் இப்படித்தான் தவிக்கிறார்கள்.

    கோயம்பேடு நெற்குன்றத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். கூலித்தொழிலாளி. இவரை செல்போனில் அழைத்தால் இந்த பாடல் வரிகள் காதில் விழுந்து இனிக்கும். வீட்டுக்கு சென்றால் நிஜத்தை பார்த்து மனம் வலிக்கும். பாலகிருஷ்ணனின் மனைவி சத்யபாமா.

    நடக்கவும், உட்காரவும் முடியாத குழந்தை... தூக்கி சுமக்க முடியாத பெற்றோர்...

    இது ஒரு தவிக்கும் குழந்தை, பரிதவிக்கும் பெற்றோரின் துயரம் சூழ்ந்த வாழ்க்கை. இதுபற்றி விவரம் வருமாறு:-

    கோயம்பேடு அருகே உள்ள நெற்குன்றம், முனியப்பா நகர் 7-வது தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்.

    கூலித்தொழிலாளியான இவரது மனைவி பெயர் சத்தியபாமா. இவருக்கு 2 குழந்தைகள். மூத்த மகன் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். 2-வது மகள் ஐஸ்வர்யா. பிறக்கும்போது கொள்ளை அழகாக பிறந்த மகளுக்கு ஐஸ்வர்யா என்று பெயர் சூட்டி மகிழ்ந்து இருக்கிறார்கள்.

    ஆனால் அந்த மகிழ்ச்சி எல்லாம் பிறந்து 6 மாதத்துக்குள் காணாமல் போய்விட்டது என்கிறார் பாலகிருஷ்ணன். அவர் கூறியதாவது:-

    பாப்பா பிறந்து சில மாதங்கள் ஆன பிறகும் கழுத்து நிற்கவில்லை. அப்போது நாங்கள் சிறு குழந்தைதானே போக போகத்தான் கழுத்து வலுப்பெறும் என்று நினைத்து இருந்தோம்.

    ஆனால் கொஞ்சம் கூட கழுத்து வலுப்பெறவில்லை. இன்று வரை நடக்க முடியாமலும், கழுத்து நிலையாக நிற்க முடியாமலும் ஒரு மாற்று திறனாளி குழந்தையை போல் இருக்கிறாள். எப்படி அவளை படுக்க வைத்தோமோ அப்படியே படுத்திருப்பாள். திரும்பி கூட அவளால் படுக்க முடியவில்லை. திரும்பி படுக்க வேண்டும் என்றால் கூப்பிடுவாள். நாக்கை நீட்டி எந்த பக்கம் திருப்பி படுக்க வைக்கணுமோ அந்த பக்கத்தை காட்டுவாள். நாங்கள் திருப்பி கிடத்துவோம். அதன் பிறகு அப்படியே படுத்திருப்பாள். இயற்கை உபாதையை கழிக்கவும் நாங்கள்தான் கழிவறைக்கு தூக்கி செல்ல வேண்டும். சில நேரங்களில் அதுவும் தானாகவே போய் விடுவாள். சிறு குழந்தையாக இருந்தபோது என் மனைவியும் எளிதாக தூக்கி விடுவார். ஆனால் இப்போது 10 வயது ஆவதால் என் மனைவியால் அவளை தூக்க கூட முடியவில்லை.

    சென்னையில் பிரபலமான ஆஸ்பத்திரிகள் அனைத்திலும் பார்த்து விட்டோம். ஆனால் அவளுக்கு வந்திருப்பது என்ன நோய் என்று இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. பிசியோதெரபி கொடுப்பது நல்லது என்றார்கள். அதற்காக ஆஸ்பத்திரிக்கு தூக்கி செல்வதிலும் பிரச்சினை. தூக்கும்போது உயிரற்ற உடலை போல கழுத்துக்கு கீழ் அப்படியே தொங்கி விடும்.

    வெளியே தூக்கி செல்லும்போது வெளிக்காற்று பட்டால் அதுவும் ஒத்துக்கொள்ளாது. பின்னர் அதற்காகவும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டும். இப்படியே 10 ஆண்டுகள் நகர்த்தி விட்டேன். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அவளை இயற்கை உபாதை கழிப்பதற்கு தூக்கி செல்ல வேண்டி இருப்பதால் என்னால் வேலைக்கும் செல்ல முடியவில்லை.

    வீட்டு பக்கத்திலேயே சிறு சிறு வேலைகள் செய்து ரூ.100, ரூ.200 சம்பாதித்து வருகிறேன். இவளுடைய எதிர்காலம் என்ன என்பதை நினைத்துதான் வேதனைபடுகிறோம்.

    நோயும் தெரியாமல், அதற்கு என்ன சிகிச்சை என்பதும் புரியாமல் இப்படி ஒரு இக்கட்டான நிலையில் எங்கள் குழந்தையோடு ஒவ்வொரு நாளையும் கழித்து வருகிறோம்” என்றார் வேதனையுடன். அவரது எதிர்பார்ப்பு எல்லாம் எவ்வளவோ நவீன மருத்துவ வசதிகள் வந்திருக்கின்றன. அரசாங்கமோ, தனியார்களோ யாராவது முன்வந்து இந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மாட்டார்களா என்பதுதான்.

    Next Story
    ×