search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க.வின் கட்சி அலுவலகமான அண்ணா- கலைஞர் அறிவாலயத்தை படத்தில் காணலாம்.
    X
    தி.மு.க.வின் கட்சி அலுவலகமான அண்ணா- கலைஞர் அறிவாலயத்தை படத்தில் காணலாம்.

    டெல்லியில் கட்டப்பட்டுள்ள அண்ணா-கலைஞர் அறிவாலயத்தின் சுவாரசிய தகவல்கள்

    டெல்லியில் கட்டப்பட்டுள்ள அண்ணா-கலைஞர் அறிவாலயத்தில் என்னென்ன வசதிகள் உள்ளன? என்பது தொடர்பான சுவாரசிய தகவல்கள் கிடைத்துள்ளன.
    சென்னை

    தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவராகவும் இருந்த கருணாநிதி, அண்ணா அறிவாலயத்தை அங்குலம், அங்குலமாக பார்த்து, பார்த்து கட்டி எழுப்பினார். கருணாநிதி இருந்தது வரையிலும் அண்ணா அறிவாலயம் அவருக்கு நாடித்துடிப்பாகவே இருந்தது. அண்ணா அறிவாலயத்தை பார்த்தப்பிறகே பல அரசியல் கட்சிகளுக்கும், தங்களுக்கான கட்சி அலுவலகத்தை கலை நயத்துடன் கட்டவேண்டும் என்ற உணர்வுகளை தட்டி எழுப்புவதாக அமைந்தது.

    1987-ம் ஆண்டு அண்ணா அறிவாலயத்தை கருணாநிதி திறந்து வைத்தார். தி.மு.க.வின் அடையாளமான அண்ணா அறிவாலயத்தின் மற்றொரு சகாப்தம் தலைநகர் டெல்லியில் தற்போது கட்டப்பட்டுள்ள அண்ணா-கலைஞர் அறிவாலயம் ஆகும். நாடாளுமன்றத்தில் 7 உறுப்பினர்களுக்கு மேல் உள்ள கட்சிகளுக்கு டெல்லியில் கட்சி அலுவலகம் கட்டுவதற்கு இடம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, 2013-ம் ஆண்டு டெல்லி தீனதயாள் உபாத்யா மார்க் பகுதியில் தி.மு.க.வுக்கு கட்சி அலுவலகம் கட்ட இடம் வழங்கப்பட்டது. இருந்தபோதிலும் கடந்த ஆண்டுதான் தி.மு.க.வின் கட்சி அலுவலகம் கட்டும் பணி தொடங்கியது.

    சென்னையை சேர்ந்த பிரபல கட்டிட நிறுவனம் இதற்கான கட்டுமான பணிகளை மேற்கொண்டது. 3 மாடிகளுடன் எழில்நயத்துடன் கட்டப்பட்டுள்ளது. அதில், அண்ணா-கலைஞர் அறிவாலயம் என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளது. நுழைவுவாயிலில் அமைக்கப்பட்ட 4 பிரமாண்ட தூண்கள் மாளிகையை கண் முன்னே நிறுத்துகிறது. நுழைவுவாயிலில் ஒரு புறம் அண்ணாவின் மார்பளவு சிலையும், மற்றொரு புறம் கருணாநிதியின் மார்பளவு சிலையும் இடம் பெற்றுள்ளன. கட்டிடம் தொன்மையான செட்டிநாடு கட்டிட கலையை பிரதிபலித்தாலும், அதன் உள்ளே பல்வேறு அதிநவீன வசதிகள் இருப்பதால் நவீனத்தை பறைசாற்றுகிறது.

    கட்டிடத்தின் கீழ்தளத்தில் கட்சி கூட்டங்களை நடத்துவதற்காக மேடையுடன் கூடிய பெரிய அரங்கம் உள்ளது. அதன் அருகே தலைவர்கள் ஓய்வு எடுப்பதற்காக சிறிய அறைகள் உள்ளன. அதன் வாசலில் 3 மாடிகளுக்கும் செல்வதற்கான லிப்ட் வசதியும் உள்ளன. லிப்ட் இருப்பதற்கு முன்னால் முகம் பார்க்கும் பிரமாண்ட கண்ணாடி சுவற்றில் பதிக்கப்பட்டுள்ளது. முதல் மாடியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அமர்ந்து பேசும் இடம், தலைவருக்கான பிரத்யேகமான அறை, ஆடம்பர தோற்றம் தரும் ஷோபாக்கள், டி.வி.கேபினட் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

    முதல் தளத்திலும், 2-ம் தளத்திலும் கருத்தரங்கு அறைகள் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. சுழலும் இருக்கை உள்பட நவீன வசதிகளுடன் 2 அறைகளும் கட்டப்பட்டுள்ளன. 2-வது தளத்தில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருப்பது போன்ற நூலகமும், அங்கு அமர்ந்து படிப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. செய்தியாளர்களுக்கென தனியாக ஒரு அறை அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் இணையதள வசதி மற்றும் தொலைபேசி வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    3-வது தளத்தில் எம்.பி.க்கள் அல்லது தமிழகத்தில் இருந்து வரும் நிர்வாகிகள் தங்கிக்கொள்வதற்காக நட்சத்திர ஓட்டல்களுக்கு நிகரான வசதிகளுடன் அறைகள் கட்டப்பட்டுள்ளன. தலைவருக்காக ஒரு பிரத்யேக தங்கும் அறையும் கட்டப்பட்டுள்ளது. உள்புற சுவர்களில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருப்பது போன்று மரத்தினாலான வேலைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மாடிப்படிகளில் முகம் பார்த்தால் அதனை பிரதிபலிக்கும் வகையிலான வெள்ளை நிற கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

    டெல்லி தி.மு.க. அலுவலகத்தை ஏப்ரல் 2-ந் தேதி மாலை 5 மணிக்கு முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். விழாவுக்கு தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்குகிறார்.

    தி.மு.க. பொருளாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவருமான டி.ஆர்.பாலு முன்னிலை வகிக்கிறார். விழாவில் பங்கேற்க வருமாறு மத்திய மந்திரிகள் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு தி.மு.க. எம்.பி.க்கள் ஏற்கனவே அழைப்பிதழ் கொடுத்து உள்ளனர்.

    இதையும் படிக்கலாம்...வெளிநாடு பயணம் வெற்றி - சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் பேட்டி
    Next Story
    ×