என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவளம் கடற்கரை உள்பட செங்கல்பட்டு மாவட்டத்தில் 10 இடங்களில் தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு
திருப்போரூர்:
தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 10 இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
இதையொட்டி இன்று காலை 6 மணி அளவில் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோவளம் ஊராட்சிக்கு தலைமை செயலாளர் இறையன்பு வந்தார். அப்போது அவர் சுற்றுலா துறை சார்பில் உள்ள நவீன தரத்தில் அமைக்கப்பட்டுள்ள நீலகொடி கடற்கரையை பார்வையிட்டார்.
அப்போது கடற் கரையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும், அழகுடனும் பராமரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் அங்கிருந்து பழைய மாமல்லபுரம் சாலை வழியாக செம்பாக்கம் ஊராட்சிக்கு சென்றார். அங்கு வசிக்கும் இருளர்களுக்கு கட்டி கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பு வீடுகளை தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார்.
மேலும் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் போதுமானதாக உள்ளதா? என அங்கு வசிக்கும் இருளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை இறையன்பு பார்வையிட்டார்.
முன்னதாக செம்பாக்கம் ஊராட்சிக்கு சென்ற தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அதிகாரிகளை ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் வரவேற்றார்.
இதைத்தொடர்ந்து அங்கிருந்து திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தண்டரை கிராமத்தில் உள்ள மூலிகை பண்ணையை பார்வையிட்டு இறையன்பு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீரப்பாக்கம், பழவேலி உள்ளிட்ட ஊராட்சிகளில் திட்டப்பணிகள் மற்றும் செங்கல்பட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் மருத்துவமனை கட்டிடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற திட்ட பணிகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின் போது அரசின் திட்டங்கள் எந்த வித குறைபாடும் இல்லாமல் பொது மக்களுக்கு கிடைக்க அதிகாரிகள் செயல்படவேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டார்.
ஆய்வின் போது செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குனர்கள் செல்வகுமார், ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.






