search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கடனை திருப்பி செலுத்தக்கோரி வங்கி அதிகாரிகள் மிரட்டியதால் பெண் தற்கொலை

    பல்லடம் அருகே கடனை திருப்பி செலுத்தக்கோரி வங்கி அதிகாரிகள் மிரட்டியதால் பெண் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள இலவந்தி ஊராட்சி கிரிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி(வயது 52), மாற்றுத்திறனாளி. இவரது மனைவி ஜோதிமணி(48). இவர்களது மகன் சண்முகசுந்தரம்(30). இவர்கள் விசைத்தறி மற்றும் கால்நடைகள் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

    கடந்த 2015ம் ஆண்டு விசைத்தறி தொழிலில் ஏற்பட்ட நெருக்கடியை தொடர்ந்து பல்லடம் வடுகபாளையத்தில் உள்ள அரசு பொதுத்துறை வங்கி கிளையில் கோவிந்தசாமி தனக்கு சொந்தமான 60 சென்ட் விவசாய நிலத்தை அடமானம் வைத்து ரூ.50 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

    அதனைத்தொடர்ந்து விசைத்தறி தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி மற்றும் கொரோனா ஊரடங்கு காரணமாக வங்கியில் பெற்ற கடனின் தவணைத் தொகையை செலுத்த வழியின்றி கோவிந்தசாமி மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தார்.

    கோவிந்தசாமி பெற்ற ரூ.50 லட்சம் வங்கி கடனுக்கு வட்டி, அபராத வட்டி என ரூ.65 லட்சம் வரை கடனை திருப்பி செலுத்த வேண்டும் என வங்கி ஊழியர்கள் பலமுறை கோவிந்தசாமியின் விசைத்தறி கூடத்திற்கும் வீட்டுக்கும் சென்று வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. கடந்த 4-ந்தேதி வங்கியின் மேலாளர், ஊழியர்கள் கோவிந்தசாமியின் குடோனுக்கு சென்று அங்கிருந்த கோவிந்தசாமியின் மனைவி ஜோதிமணியிடம் தரக்குறைவாக பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த ஜோதிமணி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். விசைத்தறி கூடத்திற்கு அருகே உள்ள தென்னந்தோப்பில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை பொதுமக்கள் மீட்டு பல்லடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஜோதிமணி, மேல் சிகிச்சைக்காக கோவை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ஜோதிமணி உயிரிழந்தார். இதையடுத்து ஜோதிமணியின் உறவினர்கள் காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரில் ஜோதிமணி இறப்புக்கு காரணமான வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியுள்ளனர். 

    Next Story
    ×