என் மலர்
உள்ளூர் செய்திகள்

காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்
நாங்குநேரி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
நாங்குநேரி அருகே கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வராததால் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாங்குநேரி:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ளது ஆழ்வார்நேரி பஞ்சாயத்து. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் பஞ்சாயத்துக்குட்பட்ட ஒரு பிரிவினர் இன்று காலை அப்பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்கள், பெண்கள் என சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் காலிக்குடங்களுடன் புதுக்குறிச்சி விலக்கு பகுதியில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு மூன்றடைப்பு போலீசார் விரைந்து சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
எங்குள் பகுதிக்கு சுமார் 20 ஆண்டுகளாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 15 நாட்களுக்கு மேலாக எங்கள் பகுதிக்கு குடிநீர் வரவில்லை. இதனால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். பலமுறை இது தொடர்பாக கேட்டும் நடவடிக்கை இல்லை. எனவே எங்கள் பகுதிக்கு வழக்கம் போல குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என கூறினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை பஞ்சாயத்து அலுவலகத்திற்கு அழைத்து சென்று தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






