என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபருக்கு அடி
    X
    வாலிபருக்கு அடி

    கல்லூரி மாணவியை தொந்தரவு செய்த வாலிபருக்கு தர்ம அடி

    விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் கல்லூரி மாணவியை தொந்தரவு செய்த வாலிபருக்கு தர்ம அடி விழுந்தது.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் நல்லமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த இளம்பெண் விருதுநகர்-சிவகாசி ரோட்டில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்து வருகிறார்.  இவர் தினமும் அரசு பஸ்சில் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம். பஸ்சில் செல்லும் போது குராயூர் பகுதியைச் சேர்ந்த வாலிபரும் பயணம் செய்வது வழக்கம். 

    அவர் அந்த மாணவியை காதலிக்குமாறு தொடர்ந்து தொல்லை செய்து வந்ததாக தெரிகிறது. பலமுறை மாணவி எச்சரித்தும் அந்த வாலிபர் பின்தொடர்வதை நிறுத்தவில்லை.

    இதனால் அந்த மாணவி அந்த வாலிபர் குறித்து உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இன்று காலை அந்த மாணவி வழக்கம் போல் விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் வந்து இறங்கினார். அப்போது அவரை வாலிபர்பின் தொடர்ந்துள்ளார். 

    இதைப்பார்த்த மாணவியின் உறவினர்கள் வாலிபரை கையும், களவுமாக பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். 10க்கும் மேற்பட்டோர் சேர்ந்து தாக்கியதால் அதிர்ச்சியடைந்த வாலிபர் அங்கிருந்து தப்ப முயன்றார்.  இருப்பினும் அவருக்கு அடி-உதை விழுந்தது. 

    பின்னர் உறவினர்கள் எச்சரித்த பின் அந்த வாலி பர் அங்கிருந்து தப்பினார். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பஸ் நிலையத்தில் ஒரு கும்பல் வாலிபரை தாக்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். 

    இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் 1 மணி நேரம் கழித்து சம்பவ இடத்திற்கு வந்தனர். இதனால் சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து தகவலை சேகரிக்க முடியவில்லை. தாக்கியவர்கள் விவரம், தாக்கப்பட்ட வாலிபரின் பெயர் குறித்த எந்த தகவலும் கிடைக்காததால் போலீசார் ஏமாற்றத்துடன் சென்றனர்.

    விருதுநகர் பழைய பஸ்நிலையத்தில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மக்கள் கூடும் இடமான இங்கு சட்டம், ஒழுங்கை பாதுகாக்க புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் அங்கு போலீசார்  இல்லை. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

    Next Story
    ×