search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை
    X
    கொலை

    திருவட்டாரில் தாயாரை அடித்து கொன்ற மகன்

    திருவட்டாரில் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த மகன் தாயாரை அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருவட்டார்:

    திருவட்டாரை அடுத்த செப்பள்ளி விளை, மாத்தூர், அருவிக்கரையை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் விஜயன் (வயது 48). ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி.

    விஜயனுக்கு திருமணமாகி மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதனால் அவரது மனைவி, விஜயனை பிரிந்து சென்றுவிட்டார். அதன்பின்பு விஜயன், அவரது பெற்றோருடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார்.

    பால் வெட்டும் தொழிலுக்கு சென்று வரும் விஜயன், அதில் கிடைக்கும் பணம் முழுவதையும் மது குடித்தே செலவழித்தார். மேலும் பணம் இல்லாத நேரத்தில் தாயாரிடம் சென்று செலவுக்கு பணம் கேட்பார். அவர் கொடுக்க மறுத்தால் தாயாரிடம் தகராறு செய்வார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு விஜயன், சுயஉதவி குழுவிடம் இருந்து ரூ.10 ஆயிரம் பணம் கடன் வாங்கி இருந்தார். இந்த பணத்தில் மது அருந்துவிட்டு மீதி பணத்தை வீட்டில் வைத்திருந்தார்.

    நேற்றிரவு வீட்டிற்கு வந்த விஜயன், வீட்டில் இருந்த பணத்தை தேடினார். ஆனால் அவர் வைத்த இடத்தில் பணம் இல்லை. இதுபற்றி தாயார் சரோஜினியிடம் கேட்டார். அவர் தனக்கு தெரியாது என்றார். ஆனாலும் விஜயன், தாயாரிடம் பணம் கேட்டு தகராறு செய்தார்.

    அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரம் அடைந்த விஜயன், அவரை கட்டையால் சரமாரியாக தாக்கினார்.

    இதில் படுகாயம் அடைந்த சரோஜினி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் அவர் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். இதை கண்டதும் விஜயன் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டார்.

    இன்று காலை சரோஜினியின் வீடு நீண்ட நேரமாக திறக்கவில்லை. அவர் வீடு முன்பு வைக்கப்பட்ட பால் கவரும் எடுக்கப்படவில்லை.

    எனவே அந்த பகுதி மக்கள் சரோஜினியின் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அங்கு அவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார், இதைகண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் இதுபற்றி அருவிக்கரை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜான் கிறிஸ்டோபருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் இதுபற்றி திருவட்டார் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் இறந்து கிடந்த சரோஜினியின் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தக்கலை டி.எஸ்.பி.கணேசனும், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும் சரோஜினியை அடித்து கொன்ற மகன் விஜயனை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. அவர்கள் அந்த பகுதியில் மறைந்திருந்த விஜயனை பிடித்து கைது செய்தனர். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீ சார் விசாரணை நடத்தி வருகிறார்கள். குடிபோதை யில் பணத்துக்காக தாயாரை மகனே அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×