என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    சத்தியமங்கலத்தில் சாக்கடை கால்வாயில் பிணமாக கிடந்த தீயணைப்பு அதிகாரி- விபத்தா?

    சத்தியமங்கலத்தில் சாக்கடை கால்வாயில் தீயணைப்பு அதிகாரி பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் (50). இவர் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலராக பணியாற்றி வந்தார். இவர் தினமும் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து சத்தியமங்கலத்துக்கு தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று வந்தார்.

    வழக்கம்போல் இன்று அதிகாலையும் கோபி செட்டிபாளையம் குள்ளம்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சத்தியமங்கலத்துக்கு புறப்பட்டார்.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் தபால்நிலையம் அருகே ரோட்டோரம் உள்ள சாக்கடை கால்வாயில் தனது மோட்டார் சைக்கிளுடன் சக்திவேல் இறந்து கிடந்தார். இதுப்பற்றி தெரியவந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர்.

    சக்திவேல் எப்படி இறந்தார் என்று தெரிய வில்லை. அவர் இறந்து கிடந்த பகுதியில் ரத்தக்கறை இருந்தது. மோட்டார் சைக்கிளில் வந்தபோது தவறி விழுந்து அவர் இறந்தாரா? அல்லது ஏதாவது வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலியானாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இறந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேலின் உடல் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் வீரர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    சக்திவேலுக்கு விஜய லட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    Next Story
    ×