என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாணியம்பாடி நெக்னா மலையில் தீ பற்றி எரிந்த காட்சி.
வேலூர், ஏலகிரி, வாணியம்பாடியில் மலைகளுக்கு தொடர்ந்து தீ வைக்கும் மர்ம கும்பல்
வேலூர், ஏலகிரி, வாணியம்பாடியில் மலைகளுக்கு தொடர்ந்து தீ வைக்கும் மர்ம கும்பல் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி, மூலக்கொல்லை, சைதாப்பேட்டை, வேலப்பாடி, ஓல்டுடவுன் பகுதியை சூழ்ந்து மலை உள்ளது.
இந்த மலையில் கோடை காலத்தில் அடிக்கடி தீ பற்றி எரிகிறது. கடந்த ஒருவாரமாக தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் இந்த மலைகளில் தீ பற்றியது.
இதில் ஏராளமான செடி, கொடிகள் எரிந்து நாசமானது. வேலூரில் சமீபத்தில் பெய்த மழையால் கண்ணுக்கு பசுமையாக காட்சியளித்த மலைகள் தற்போது எரியும் தீயால் வறண்டு காணப்படுகிறது. தீ எப்படி பிடிக்கிறது என்று வனத்துறையினருக்கு இதுவரை தெரியவில்லை.
தீ வைக்கும் கும்பலை வனத்துறையினர் கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படுகிறது.
ஏலகிரி மலை சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த ஏலகிரி மலையானது 14 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவுக்கும் தமிழ் புலவர்கள் மற்றும் கொடை வள்ளல்கள் பெயர்கள் சூட்டப் பட்டுள்ளது.
மேலும் எந்தக் காலத்திலும் ஒரே மாதிரியான சீதோசன நிலை நிலவி வருவதால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் சுற்றுலாவிற்கு வரும் சமூக விரோதிகள் சிலர் விடுமுறை நாட்களில் மது அருந்திவிட்டு புகைப்பிடித்து தீயை காட்டுப்பகுதிக்குள் போட்டு விடுவதால் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் காய்ந்து கிடக்கும் சருகுகளால் தீப்பிடித்து அரிய வகை மரங்கள் மூலிகைச் செடி கொடிகள் உள்ளிட்ட கரடி மான் முயல் மலைப் பாம்பு போன்ற உயிரினங்கள் தீயில் கருகி உயிர் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று சமூக விரோதிகள் ஏலகிரி மலைக்கு வந்து மது அருந்திவிட்டு புகைப்பிடித்து தீயை காட்டுப்பகுதிக்குள் போட்டு விட்டுச் சென்றதால் சிறிய அளவில் பற்றிய தீயானது மளமளவென 4 வது வளைவில் இருந்து 9 வது கொண்டை ஊசி வளைவுகள் வரைக்கும் காட்டுத் தீ பற்றி எரிந்தது. இதனால் பல்வேறு அரிய வகை மரங்கள் மூலிகை செடி கொடிகள் காட்டுப் பகுதியில் வசிக்கும் உயிரினங்கள் போன்றவை தீயில் கருகியது.
மேலும் நேற்று வார விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஏலகிரிமலை வனத்து பரந்தாமன் தலைமையிலான வனக்காவலர்கள் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர்.
ஆனால் காட்டுத் தீயானது மளமளவென பரவி மலையில் மேல் பகுதிக்கு சென்றது. இதனால் வனத்துறையினர் காட்டுத்தீயை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.
பின்னர் மலைச் சாலைகளில் பற்றி எரிந்ததால் ஏலகிரி மலைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் மேலிருந்து கீழும், கீழிருந்து மேலும் செல்லமுடியாமல் அனலின் தாக்கத்தால் கடும் அவதிக்குள்ளாகினர்.
மேலும் வனத்துறையினர் காட்டுப் பகுதிக்குள் நுழைந்து காட்டுத் தீ வைத்த மர்ம கும்பல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டும், பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க தீவிர நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒருவாரத்தில் 3&வது முறையாக ஏலகிரிமலையில் தீ பற்றி எரிந்த சம்பவம் நடந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் வனசரகத்திற்கு உட்பட்ட நெக்னாமலை, வாணியம்பாடியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த காட்டுப் பகுதியில் நெக்னாமலை ஊராட்சி மலை கிராமம் உள்ளது. இந்த காட்டின் வழியாக மலை கிராமங்களுக்கு செல்பவர்களும், இந்த வனப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து கொண்டு சென்று மீண்டும் திரும்பி வருபவர்களும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 6.30 மணி அளவில் இந்த காட்டுப்பகுதிக்கு மர்மகும்பல் தீ வைத்துள்ளனர். இதனால் தீ மளமளவென பரவி காடுகள் முழுவதும் எரிந்து வருகின்றது. வனத்துறை அதிகாரிகள் வந்து தீயை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுத்து வந்தாலும், 100&க்கும் மேற்பட்ட ஏக்கர் காடுகள் தொடர்ந்து நேற்று இரவு 9 மணி வரை எரிந்தது.
வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளும், மாடுகளும் மீண்டும் வீடு திரும்பாமல் காட்டுப்பகுதியில் உள்ளதால், இதில் அவைகளும் எரிந்து கருகி இருக்கும் என அஞ்சப்படுகிறது.
இதனால் மலை அடிவாரப் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் கூடியுள்ளனர். வனத்துறை அதிகாரிகள் காடுகளுக்கு தீ வைத்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வனப்பகுதி முழுவதும் எரிந்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. ஆனால் வனத்துறை அதிகாரிகள் இதில் அலட்சிய போக்காக இருப்பதால் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Next Story






