search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகைகள்
    X
    நகைகள்

    கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி பெற்றவர்களின் கணக்குகளை தணிக்கை செய்ய உத்தரவு

    கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி பெற்றவர்களின் விவரங்களை சிறப்பு தணிக்கை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    கூட்டுறவு வங்கிகளில் 40 கிராம் வரை (5 பவுன்) நகைகளை அடகு வைத்து கடன் பெற்றவர்களுக்கு அவர்களது கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி ஆட்சிக்கு வந்ததும் நகை கடன்கள் தள்ளுபடி செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி நகர கூட்டுறவு வங்கிகள், மாவட்ட கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் வாங்கியவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

    கடன் தள்ளுபடி தொடர்பாக அரசு பல்வேறு நடைமுறைகளை பின்பற்றுமாறும் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அதன் அடிப்படையில் நகை கடன் பெற்றவர்கள் தகுதியானவர்கள் தானா? என்று ஆய்வு செய்து அதன் அடிப்படையில் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் நகை கடன் தள்ளுபடி பெற்றவர்களின் விவரங்களை சிறப்பு தணிக்கை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் கூட்டுறவு தணிக்கைத்துறை இயக்குனர் மண்டல வாரியாகவும், மாவட்ட வாரியாகவும் 75 தணிக்கை அதிகாரிகளை நியமித்துள்ளார்.

    கூடுதல் இயக்குனர், இணை இயக்குனர், துணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், அந்தந்த மண்டலங்கள்-சரகங்களில் சோதனை தணிக்கையை தனித்தனியாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    முதல் கட்டமாக நகர கூட்டுறவு வங்கி மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளிலும், 2-ம் கட்டமாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் இதர சங்கங்களில் தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஒரு அதிகாரி சோதனை தணிக்கை மேற்கொண்ட கூட்டுறவு நிறுவனத்தை மீண்டும் பிற அதிகாரி சரிபார்க்க தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தணிக்கை அறிக்கை முடிந்ததும் சரக கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குனர்கள் மற்றும் மண்டல இணை இயக்குனர்கள் உடனடியாக தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

    சென்னை மண்டலத்தில் தணிக்கை செய்ய இணை இயக்குனர் ரக்பியூதின் உசேன், மதுரை மற்றும் திருநெல்வேலி மண்டலத்துக்கு கூடுதல் இயக்குனர் என்.எஸ்.சாரதா, கோவைக்கு இணை இயக்குனர் தனசேகரன், திருச்சிக்கு இணை இயக்குனர் சித்ரகலா, காஞ்சிபுரத்துக்கு விக்டர் பால்ராஜ், திருவள்ளூருக்கு மணி உள்ளிட்ட 75 அதிகாரிகள் அதில் இடம் பெற்றுள்ளனர்.

    Next Story
    ×