என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
காதல் பிரச்சினையில் தற்கொலைக்கு முயன்ற வாலிபரை மீட்ட போலீசார்
காதல் பிரச்சினையில் தற்கொலைக்கு முயன்ற வாலிபரை போலீசார் மீட்டனர்.
ஈரோடு:
சென்னை வேளச்சேரியை சேர்ந்த லோகேஷ் என்பவர் ஈரோடு டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமாரை நள்ளிரவு 2 மணி அளவில் தொடர்பு கொண்டு எனது நண்பர் அஜித்குமார் என்பவர் ஈரோட்டில் வசித்து வருகிறார்.
அவர் காதல் பிரச்சினை காரணமாக விஷ மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயல்கின்ற வீடியோவை எனது வாட்ஸ் அப்பிற்கு அனுப்பி உள்ளார். எனது நண்பர் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டு இருக்குமோ என்று தோன்றுகிறது.
தயவு செய்து எனது நண்பர் உயிரை காப்பாற்றுங்கள் என்று கூறி அஜித்குமார் தொலைபேசி எண்ணை அனுப்பினார். இதனையடுத்து டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் அஜித்குமார் தொலைபேசி எண்ணிற்கு போன் செய்தார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.
இதனையடுத்து அவர் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு இது குறித்து தகவல் தெரிவித்து அனுப்பி அவர் இருக்கும் இடத்தை ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த செல்போன் நம்பர் ஆப்பக்கூடல் புன்னம் கிராமத்தை காண்பித்தது.
உடனடியாக ஆப்பக்கூடல் சப்&இன்ஸ் பெக்டருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்&இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் போன் சிக்னலை வைத்து அஜித்குமார் வீட்டுக்கு சென்றனர்.
அப்போது அவரது வீட்டின் முன்பு அவரது பெற்றோர் படுத்து தூங்கி கொண்டு இருந்தனர். அவர்களை எழுப்பி நடந்த விஷயத்தை போலீசார் கூறினர்.
பின்னர் போலீசாரும் அவரது பெற்றோரும் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அஜித்குமார் மயங்கிய நிலையில் கிடந்தார்.
உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தற்போது அஜித்குமார் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் துரிதமாக செயல்பட்டதால் வாலிபர் உயிர் காப்பாற்றப்பட்டது.
Next Story






