என் மலர்
உள்ளூர் செய்திகள்

பக்தர்கள் உடலில் சேறு பூசி வந்த காட்சி.
உடலில் சேறு பூசி நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள்
பவானி செல்லியாண்டியம்மன் கோவில் விழாவையொட்டி பக்தர்கள் உடலில் சேறு பூசி நேர்த்தி கடன் செலுத்தினர்.
பவானி:
பவானி செல்லியாண்டியம்மன் கோவில் விழாவையொட்டி பக்தர்கள் உடலில் சேறு பூசி நேர்த்தி கடன் செலுத்தினர்.
பவானி கூடுதுறை அருகே செல்லியாண்டியம்மன், மாரியம்மன், எல்லை யம்மன் கோவில் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டது.
விழாவையொட்டி நேற்று முன்தினம் அம்மனுக்கு புனித நீராட்டு விழா நடந்தது. நேற்று மதியம் மாரியம்மன் கோவிலில் தீ மிதிக்கும் விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.
விழாவையொட்டி இன்று (புதன்கிழமை) காலை புது பஸ் நிலையம் அருகே உள்ள எல்லையம்மன் கோவிலில் இருந்து சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் குதிரையுடன் அம்மனை மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆட்டம் போட்டு கொண்டு வந்தனர். மேலும் பக்தர்கள் பலர் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தங்கள் உடலில் சேறு பூசி கொண்டு நேர்த்தி கடன் செலுத்தினர். தொடர்ந்து பக்தர்கள் மிளகு, உப்பு, காய்கறிகள் மற்றும் கனி வகைகளை சூறை விட்டனர். இதை பொதுமக்கள் பலர் போட்டி போட்டு கொண்டு எடுத்தனர்.
இதில் இளைஞர்கள் பலர் சாமி வேடம் அணிந்தும் உடலில் வண்ணங்கள் தீட்டி கொண்டும் வந்தனர். சிறுவர்கள் உடலில் சேறு பூசி வேப்பிலையுடன் ஆடி கொண்டு வந்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தண்ணீர், பிஸ்கட் மற்றும் பழ வகை கள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து இன்று மதியம் பொங்கல் விழா நடந்தது. இதில் பெண்கள் பலர் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து வந்து அம்மனை தரிசனம் செய்தனர். இன்று இரவு பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்து வந்து வழி படுகிறார்கள்.
நாளை காலை 9 மணிக்கு தேரோட்டம், கம்பம் எடுத்து ஆற்றில் விடும் விழாவும் நடக்கிறது. 4-ந் தேதி இரவு பரிவேட்டை, 5-ந் தேதி இரவு தெப்ப உற்சவம், 6-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.
Next Story






