search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    திருப்பூரை முன்மாதிரி மாநகராக புதிய மேயர் மாற்ற வேண்டும்- தொழில்துறையினர் வலியுறுத்தல்

    திருப்பூரில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் கூட இல்லாதது மிகப்பெரிய குறை. எனவே புதிதாக பொறுப்பேற்கும் மாநகராட்சி நிர்வாகம் நகரை அழகுப்படுத்த வேண்டும்.
    திருப்பூர்:

    திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் மூலம் ஆண்டுக்கு ரூ. 27 ஆயிரம் கோடி மதிப்பில் அன்னிய செலாவணி ஈட்டுகிறது. ரூ. 20 ஆயிரம் கோடிக்கு மேல் உள்நாட்டு ஆடை வர்த்தகம் நடக்கிறது. 

    அதிக வேலைவாய்ப்பு உள்ளதால் நாடுமுழுவதும் உள்ள பல லட்சம் தொழிலாளர்களின் வேடந்தாங்கலாக திகழ்கிறது. திருப்பூரில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் கூட இல்லாதது மிகப்பெரிய குறை. 

    எனவே புதிதாக பொறுப்பேற்கும் மாநகராட்சி நிர்வாகம் நகரை அழகுப்படுத்த வேண்டும் என திருப்பூர் பின்னலாடை துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

    இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறுகையில், 

    பின்னலாடை ஏற்றுமதி நகரான திருப்பூரில் அடிப்படை வசதிகள் கூட இல்லாதது மிகப்பெரிய வருத்தம். புதிய மாநகராட்சி நிர்வாகம், அடிப்படை உள்கட்டமைப்பு வசதி மேம்பாட்டில் தனி கவனம் செலுத்த வேண்டும், 60 வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.

    சர்வதேச தரத்தில் சாலை, மேம்பாலம், பறக்கும் பாலங்கள் கட்டவேண்டும், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் நொய்யலாற்றை சுத்தப்படுத்த வேண்டும், ஆற்றின் இரு கரைகளிலும், பூங்காக்கள் அமைக்க வேண்டும். 

    ஆற்றில் படகு சவாரி துவக்கலாம். இதன் மூலம் ஆறும் பாதுகாக்கப்படும். நகரமும் அழகுபெறும் என்றார்.

    தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க தலைவர் (சைமா) ஈஸ்வரன் கூறுகையில், 

    திருப்பூர் இன்று இத்தகைய வளர்ச்சி பெற்றிருப்பதற்கு பின்னலாடை தொழில்தான் காரணம். எனவே தொழிலை வளர்ச்சி பெறச்செய்தால், நகரம் மென்மேலும் வளர்ச்சி பெறும். வேலைவாய்ப்பு பெருகும். அரசுக்கும் வரி வருவாய் பெருகும். இதை உணர்ந்து, புதிய மேயர் மற்றும் கவுன்சிலர்கள், தொழில் வளர்ச்சியை உயிர் நாடியாக கொண்டு திட்டங்களை வகுக்க வேண்டும்.

    அனைத்து சாலைகளையும் சீரமைத்து போக்குவரத்தை எளிமைப்படுத்துதல், குப்பை மேலாண்மை மூலம் நகர தூய்மை மற்றும் சுகாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும். தொலைநோக்கு பார்வையில் திட்டங்கள் வகுத்து செயல்படுத்தி, முன்மாதிரி மாநகராக திருப்பூரை மாற்றிக்காட்ட வேண்டும் என்றார். 

    திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறுகையில், பின்னல் நகரான திருப்பூரில் மேயர் பதவி என்பது  பொக்கிஷமானது. சிறந்த திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதன்மூலம் திருப்பூர் மேயர்  உலக அரங்கில் புகழ் பெறமுடியும். 

    மாநகர எல்லை பகுதிகளில் தொழிலாளர் குடியிருப்புகளுடன் கூடிய துணை நகரங்களை உருவாக்கினால், நகரமும் விரிவடையும், பின்னலாடை தொழிலும் வளர்ச்சி பெறும் என்றார். 

    திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க ‘டீமா’ தலைவர் முத்துரத்தினம் கூறுகையில், 

    தொழிலாளர்களும், தொழில் முனைவோரும் மிகுந்த நம்பிக்கையுடன் தங்களை தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதை புதியதாக பொறுப்பேற்கும் மேயர் உட்பட கவுன்சிலர்கள் மனதில் கொண்டு வர்த்தக நோக்கமின்றி செயலாற்ற வேண்டும். 

    திருப்பூரில் ஏராளமான தொழிலாளர் மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர். இதனால், தொழில் வளர்ச்சியும், தொழிலாளர் நலனும் கெடுகிறது. மாநகர பகுதியில் மதுக்கடை எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க வேண்டும். கட்சி பாகுபாடின்றி அனைத்து வார்டுகளிலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும் என்றார். 
    Next Story
    ×