என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
83 ஆயிரம் சிறுவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 83 ஆயிரம் சிறுவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 83 ஆயிரம் சிறுவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டது. முதலில் முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
அதன் பிறகு 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் 45 வயதுக்கு மேற்பட்ட பொது மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக கொரோனா தாக்கம் ஏற்பட்டாலும் லேசான அறிகுறிகளையே அவர்கள் குணம் அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வைரஸ் வேகமாக பரவியதால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து 12 முதல் 18 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டது.
இதில் முதற்கட்டமாக 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதி அளிக்கப் பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்கள் மொத்தம் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 161 பேர் உள்ளனர்.
இவர்களுக்கு அந்தந்த பள்ளியிலேயே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 83, 336 சிறுவர்களுக்கு கொரோனா முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 28 நாட்கள் கடந்த சிறுவர்களுக்கு 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் 43 ஆயிரத்து 712 சிறுவர்களுக்கு கொரோனா 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Next Story






