search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    திருப்பூர் மாவட்டத்தில் நகராட்சி- பேரூராட்சி தலைவர்கள் பதவியை கைப்பற்ற போட்டா போட்டி

    நகராட்சித்தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் மார்ச் 4-ந்தேதி நடக்கிறது.
    உடுமலை:

    உடுமலை நகராட்சியிலுள்ள 33 வார்டுகளில், தி.மு.க., 23 வார்டுகளிலும், அ.தி.மு.க., 4, ம.தி.மு.க., 1, காங்கிரஸ் 1 மற்றும் 4 சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். தி.மு.க., கூட்டணி, அதிக இடங்களை கைப்பற்றியது. வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவி ஏற்பு வருகிற 2-ந்தேதி நடக்கிறது.

    நகராட்சித்தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் மார்ச் 4-ந்தேதி நடக்கிறது. உடுமலை நகராட்சித்தலைவர் பொது பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாரம்பரியம் மிக்கதும் 1918-ல், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 104 ஆண்டு பழமையான நகராட்சியுமான உடுமலை நகராட்சித்தலைவர் பதவியை கைப்பற்றுவது யார் என்ற போட்டி தி.மு.க., நிர்வாகிகளுக்குள் ஏற்பட்டுள்ளது.

    அதிக அளவு தி.மு.க., வினர் வெற்றி பெற்றுள்ளதால் மாற்றுக்கட்சிகள் போட்டியிட வாய்ப்பில்லை. தி.மு.க., தலைமை முடிவு செய்யும் வார்டு உறுப்பினர்களே தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியும் என்ற சூழ்நிலை உள்ளது. 

    வெற்றி பெற்றவர்களில், ஒரு சிலர் தலைவர், துணைத்தலைவர் பதவியை பிடித்து விட வேண்டும் என முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

    தளி பேரூராட்சியில் மொத்தமுள்ள 17 வார்டுகளில் தி.மு.க., 11., அ.தி.மு.க., 3, மார்க்சிஸ்டு கம்யூ., 2, காங்கிரஸ் 1 வெற்றி பெற்றுள்ளது. இந்த பேரூராட்சித்தலைவர் பதவி பொது பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    மடத்துக்குளம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில்  தி.மு.க., சார்பில் போட்டியிட்ட 12 பேரும், அ.தி.மு.க., 3, காங்கிரஸ் 1, சுயேட்சை 2 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். சங்கராமநல்லூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் தி.மு.க., 8, அ.தி.மு.க., 5, ம.தி.மு.க., 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

    கொமரலிங்கம் பேரூராட்சி, 15 வார்டுகளில் தி.மு.க., 10, அ.ம.மு.க., 3, அ.தி.மு.க., 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    மடத்துக்குளம், கொமரலிங்கம், சங்கராமநல்லூர் பேரூராட்சித்தலைவர் பதவிகள் பெண்களுக்கு (பொது) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கணியூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் தி.மு.க., 10, அ.தி.மு.க., 1, காங்கிரஸ் 2, சுயேட்சை 2 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இங்கு தலைவர் பதவி பெண் (எஸ்.சி.,) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    4 பேரூராட்சிகளில் பெண் தலைவர்களும், தளி பேரூராட்சியில் ஆண் தலைவரும் தேர்வு செய்ய வேண்டும். அனைத்து பேரூராட்சிகளிலும்  தி.மு.க., தேவையான மெஜாரிட்டி வார்டு உறுப்பினர்களை பெற்றுள்ளதால் தி.மு.க.,வினரே தலைவர் மற்றும் துணைத்தலைவராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 5 பேரூராட்சித்தலைவர் மற்றும் துணைத்தலைவர் என 10 பதவிகளுக்கான மறைமுக தேர்தல், மார்ச் 4-ந்தேதி நடக்கிறது.

    பேரூராட்சி தலைவர் பதவியை பிடிக்க தி.மு.க.,வினரிடையே அதிக போட்டி ஏற்பட்டுள்ளது. 4 பேரூராட்சிகளில் பெண் தலைவர்கள் என்பதால் இங்கு துணைத்தலைவர் பதவியை பிடிக்க வெற்றி பெற்ற ஆண் பேரூராட்சி கவுன்சிலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

    அதிக பலத்துடன் தி.மு.க., வெற்றி பெற்றுள்ளதால் ‘குதிரை பேரம்‘ ,கவுன்சிலர்களை கடத்திச்சென்று வைத்தல் போன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பில்லை. ஒருவாரமே உள்ளதால் உடுமலை நகராட்சித்தலைவர் யார், 5 பேரூராட்சிகளின் தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பும், பரபரப்பும் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. 

    இதேப்போல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மற்ற 5 நகராட்சிகள், 10 பேரூராட்சிகளிலும் தலைவர்,துணைத்தலைவர் பதவியை கைப்பற்ற வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.  

    வெறும் 15 வார்டுகளுடன் சிறப்புநிலை பேரூராட்சியாக இருந்த திருமுருகன்பூண்டி கடந்த பிப்ரவரி மாதம் நகராட்சி அந்தஸ்துக்கு உயர்ந்தது. 

    சில புதிய பகுதிகளை உள்ளிழுக்கும் திட்டமாக அருகேயுள்ள பழங்கரை ஊராட்சியை பூண்டி நகராட்சியுடன் இணைக்க மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. 

    பழங்கரை மக்கள் இதற்கு ஆட்சேபனை தெரிவித்ததால், எல்லையை விரிவாக்கும் திட்டம் கைவிடப்பட்டது. 

    பூண்டி நகராட்சிக்குள் இருந்த 15 வார்டுகள் 27 வார்டுகளாக பிரிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. வார்டு வரையறையில் குறிப்பிட்ட சில பகுதிகள், குறிப்பிட்ட கட்சிகளின் ஓட்டு வங்கி உள்ள இடங்களாக மாறிப்போனது. 

    பூண்டி பேரூராட்சியாக இருந்தவரை அ.தி.மு.க., மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் செல்வாக்கு மிகுந்த பகுதியாக இருந்து வருகிறது. இதுவரை நடந்த பேரூராட்சி தேர்தலில் அ.தி.மு.க., மற்றும் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்கள் தான் தலைவர், துணைத்தலைவர் பதவியை அலங்கரித்துள்ளனர். ஓரிரு வார்டுகளில் மட்டுமே  தி.மு.க.,வினர் வெற்றி பெற்று வந்துள்ளனர்.

    நடந்து முடிந்த தேர்தலில் அ.தி.மு.க., சார்பில், 24 வார்டுகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். 3 வார்டுகளில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. இதில் 10 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

    தி.மு.க. கூட்டணியில் 16 வார்டுகளில் களமிறங்கிய தி.மு.க., 9 வார்டுகளிலும், 6 வார்டுகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு 5 வார்டுகளிலும், 5 வார்டுகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. தி.மு.க., கூட்டணி 17 வார்டுகளில் வெற்றி பெற்று பெரும்பான்மைக்கு தேவையான 14 வார்டுகளுக்கும் அதிகமாக பெற்றிருக்கிறது.

    தி.மு.க.. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூறுகையில்,  

    மக்களுக்கு தேவையான சாலை, கழிவு நீர் கால்வாய், சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்ற எங்களின் பிரசாரம் எடுபட்டது. 

    கூட்டணி கட்சியினருடன் அனுசரித்து தேர்தல் பணியாற்றியதும் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றனர். இங்கு தலைவராக யார் வரப்போகிறார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

    இதேப்போல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மற்ற 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகளிலும் தலைவர்,துணைத்தலைவர் பதவியை கைப்பற்ற வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.  
    Next Story
    ×